சேலம்: “நம்மை ஒரு சுய பரிசோதனை செய்து கொள்வதற்காக வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
மாவட்ட அளவிலான வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “முதல்வர் சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக எண்ணற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை அறிவித்து சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் அரசின் திட்டங்கள் சேலம் மாவட்டத்தில் முழுமையாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்திடும் வகையில் இன்றைய தினம் அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடன் மாவட்ட அளவிலான வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தை வழக்கமான ஒரு பணியாக எடுத்துக்கொள்ளாமல் நாம் செய்கின்ற மக்கள் பணிகளை சரியாகத்தான் செய்கிறோமா அல்லது செய்கின்ற பணிகளில் என்னென்ன முன்னேற்றங்கள் வேண்டும் என்பதை அறிந்து கொள்ளும் வகையிலும் நமக்கான ஒரு சுய பரிசோதனை செய்து கொள்வதற்காக இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது.
சேலம் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர், பொதுமக்களுடனேயே பயணித்துக் கொண்டிருக்கின்ற காரணத்தால் பொதுமக்களின் தேவைகளை முழுமையாக தெரிந்து வைத்துள்ளார். பொதுமக்களும் தமிழக முதல்வருக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கி வருவதை செல்லும் இடங்களில் எல்லாம் காண முடிகிறது.
மேலும், இக்கூட்டத்தின் முக்கியமான நோக்கமே மக்கள் பிரச்சினைகளை சரிசெய்திட வேண்டும் என்பதாகும். குறிப்பாக, பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உடனுக்குடன் தீர்வுகாண பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
குறிப்பாக, வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் குறித்தும், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டுவரும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், நமக்கு நாமே திட்டம் குறித்தும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும், நான் முதல்வன் திட்டம் குறித்தும், பள்ளிக் கல்வித் துறையின் எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்தும், இல்லம் தேடிக் கல்வித் திட்டம் குறித்தும், புதுமைப் பெண் திட்டம் குறித்தும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் குறித்தும், முதல்வரின் முகவரி திட்டம் குறித்தும் உள்ளிட்ட பல்வேறு சிறப்புத் திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
முதல்வர் மக்கள் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருகிறார்கள். அதற்கு அரசு அலுவலர்கள் உறுதுணையாக இருந்து செயல்பட வேண்டும். அரசு அலுவலர்கள் அரசின் அனைத்துத் திட்டங்களையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு அனைத்து அரசு அலுவலர்களுக்கும் எனது வாழ்த்துகளையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் அவர் பேசினார்.