வெடிக்கும் சர்ஜிகல் ஸ்ட்ரைக் சர்ச்சை; காங்கிரஸ் தலைவர் மீண்டும் கேள்வி.!

கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி புல்வாமா என்ற இடத்தில் துணை ராணுவப் படையினர் வந்த பேருந்து மீது, பயங்கரவாதி ஒருவர் தனது வாகனத்தை மோதி வெடிக்கச் செய்ததில் வாகனத்தில் பயணித்த 44 வீரர்கள் உயிரிழந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில், பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் இயங்கி வந்த ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில், அந்த பயிற்சி முகாமும் அங்கிருந்த பயங்கரவாதிகளும் அழிக்கப்பட்டதாக ஒன்றிய அரசு தெரிவித்தது.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அதிக பெரும்பான்மையுடன், தொடர்ந்து இரண்டாம் முறையாக ஆட்சி அமைத்தது. இந்தநிலையில் சர்ஜிகல் தாக்குதல் நடத்தியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் தெரிவித்தார்.

ஜம்முவில் உள்ள சத்வாரி சவுக்கில் இந்திய ஒற்றுமை பயணத்தின் போது பேசிய காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங், ‘‘புல்வாமா தாக்குதலின்போது, வீரர்கள் விமானம் மூலம் சிகிச்சைக்கு மாற்று இடத்திற்கு கொண்டுசெல்லப்பட வேண்டுமென சிஆர்பிஎப் அதிகாரிகள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், பிரதமர் மோடி அதை மறுத்துவிட்டார். அதனோடு ஒவ்வொரு வாகனமும் சோதனை செய்யப்படுகிறது. பிறகு ஏன் ராணுவ வாகனத்தின் மீது மோதிய ஸ்கார்பியோ வாகனத்தை சோதனை செய்யவில்லை. அதனால் தான் 40 ராணுவ வீரர்கள் பலியாகினர். எப்படி இவ்வாறான பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது?

புல்வாமா தாக்குதல் குறித்த அறிக்கை இதுவரை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. அதேபோல் சர்ஜிகல் தாக்குதல் நடத்தியதாக ஒன்றிய பாஜக அரசு கூறுகிறது. ஆனால், அதற்கான ஆதாரத்தை இதுவரை தாக்கல் செய்யவில்லை. புல்வாமா சம்பவம் அரசின் தவறு. புல்வாமா பதற்றமான பகுதி என்பது அரசுக்கு தெரியும். பிறகு ஏன் ராணுவ வீரர்களை காஷ்மீருக்கு விமானம் மூலம் அனுப்பவில்லை’’ என அவர் கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் தலைவரின் கருத்துக்கு பாஜக கடும் எதிர்வினையாற்றியது. தேசவிரோத கருத்துக்களை காங்கிரஸ் தெரிவித்துள்ளதாகவும், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் பாஜக கோரியது. ஆனால் திக்விஜய சிங்கின் கருத்தை ராகுல் காந்தி மறுத்துள்ளார்.

ஜம்முவில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி இது குறித்து கூறும்போது, ‘‘திக்விஜய சிங்கின் கருத்துடன் நாங்கள் உடன்படவில்லை. கட்சியின் கருத்துகள் உரையாடலில் இருந்து உருவாக்கப்படுகின்றன. திக்விஜய சிங்கின் கருத்துக்கள் புறம்பான கருத்துக்கள். அவை கட்சியின் கருத்துக்கள் அல்ல. நாங்கள் முற்றிலும் தெளிவாக இருக்கிறோம். ஆயுதப்படைகள் ஒரு வேலையைச் செய்கின்றன, மேலும் அவர்கள் அந்த வேலையைச் சிறப்பாகச் செய்கிறார்கள். அவர்கள் ஆதாரம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை’’ என அவர் தெரிவித்தார்.

இந்தநிலையில் சர்ஜிகல் ஸ்டரைக் நடத்தியதற்கான வீடியோ இருந்தால் காட்டுங்கள் என உத்தரபிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் ரஷித் அல்வி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ‘‘பாதுகாப்புப் படைகள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது, ஆனால் பாஜக அரசை நம்ப முடியாது. அரசாங்கம் தன்னிடம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் வீடியோ இருப்பதாகச் சொல்கிறது. அதைக் காட்டுமாறு திக்விஜய சிங் அரசிடம் கேட்பதில் என்ன தவறு? நாங்கள் ஆதாரம் கேட்கவில்லை. ஆனால் அரசாங்கம் தன்னிடம் இருப்பதாகக் கூறும் வீடியோவைக் காட்ட வேண்டும் என்பதை தான் கோறுகிறோம்.

சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் நம்பகத்தன்மையை நான் கேள்வி கேட்கவில்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் கூறும் முரண்பாடான கூற்றுக்கள் குறித்து நான் கேள்வி எழுப்புகிறேன். சர்ஜிக்கல் ஸ்டிரைக் தொடர்பாக யோகி ஆதித்யநாத் வெவ்வேறு கோரிக்கைகளை முன்வைத்தபோது, அமித் ஷா வெவ்வேறு கருத்துகளைக் கூறினார். ராணுவம் என்பது பாஜகவின் நீட்சி என்ற வகையில் பாஜக செயல்படுகிறது. ராணுவம் நாட்டுக்கு சொந்தமானது, பாஜகவினுடையது அல்ல’’ என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.