பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் விமானத்திற்கு வெளியே ஏறுவதற்காக பஸ்ஸில் காத்திருந்த 55 பயணிகளை அம்போ என விட்டு விட்டுச் சென்ற சம்பவத்திற்காக கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனத்திற்கு இந்திய விமானப் போக்குவரத்து கண்காணிப்பு குழுவான டிஜிசிஏ ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. ஜனவரி 9 ஆம் தேதி காலை 6:30 மணிக்கு டெல்லி செல்லும் விமானத்தில் ஏர்லைன்ஸ் பயணிகள் காத்திருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. முன்னதாக DGCA விமான நிறுவனத்திற்கு ஒரு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நோட்டீசுக்கு பதிலளித்த விமான நிறுவனம் அளித்த பதிலில் இருந்து, கோ ஃபர்ஸ்ட் விமானத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பாக டெர்மினல் ஒருங்கிணைப்பாளர், வணிக ஊழியர்கள் மற்றும் பணியாளர்களிடையே முறையற்ற தகவல் தொடர்பு, ஒருங்கிணைப்பு இல்லாமல் இருந்தது தெரியவந்துள்ளது.
“பயணிகளை கையாளுதல், சுமை மற்றும் டிரிம் ஷீட் தயாரித்தல், விமானத்தை அனுப்புதல் மற்றும் பயணிகள்/சரக்கு கையாளுதல் ஆகியவற்றிற்கு போதுமான ஏற்பாட்டை உறுதி செய்ய விமான நிறுவனம் தவறிவிட்டது” என்று DGCA ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த தவறுகளுக்காக, DGCA விமான நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
முன்னதாக, பெங்களூரு விமான நிலையத்தில் ஜனவரி 9 ஆம் தேதி பயணிகள் பெட்டியில் 55 பயணிகளை விட்டுச் சென்ற விமானம் சம்பந்தப்பட்ட சம்பவத்தில் கோ ஃபர்ஸ்ட் உரிய விதிமுறைகளை புறக்கணித்ததாக விமான கண்காணிப்பு அமைப்பு கூறியது.
ஜனவரி 10 அன்று, Go First நிறுவனம் இதற்காக மன்னிப்புக் கோரிய, “பெங்களூருவிலிருந்து டெல்லிக்கு G8 116 விமானத்தில் பயணிகளை ஏற்றும் விஷயத்தில் கவனக்குறைவினால், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். பயணிகள் மாற்று விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்” என தெரிவித்தது.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட ஒரு பயணி, “Go – First விமான நிறுவனம் உடனான மிகவும் பயங்கரமான அனுபவம். காலை 5:35 மணிக்கு விமானத்திற்காக பேருந்தில் ஏறிய நிலையில், காலை 6:30 மணி, இன்னும் 50 பயணிகளுடன் பஸ்ஸிலேயே இருந்தோம். G8 116 விமானம் 50+ பயணிகளை விட்டு விட்டு புறப்பட்டு செல்கிறது. அலட்சியத்தின் உச்சம்!” என பதிவிட்டார். கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம், பின்னர் விட்டுப் போன பயணிகளுக்கு புதிய போர்டிங் பாஸ்களை வழங்கி, அவர்களை தனி விமானத்தில் டெல்லிக்கு அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.