சென்னை: சென்னை அண்ணா சாலையில் கட்டிட இடிப்பின்போது பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், சென்னையில் ட்ரோன் மூலம் கால்வாய்களில் கொசு மருந்து அடித்து கொசு அழிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நேற்று சென்னை அண்ணா சாலையில் நடந்த விபத்து குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்ப, “அந்த கட்டிடத்தை இடிக்க மாநகராட்சியில் முறையான அனுமதி வாங்கியுள்ளனர். ஆனால் கட்டிட இடிப்பின்போது பேரிகேட் அமைக்க வேண்டும், வலைகள் போட வேண்டும் போன்ற மாநகராட்சி விதித்துள்ள நடைமுறைகள் எதையும் பின்பற்றவில்லை. அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இனி இதுபோன்ற விபத்துகள் நடைபெறாத வண்ணம் மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்கும்” என்றார்.
முன்னதாக நேற்று (ஜன.27) காலை சென்னை அண்ணா சாலையின் ஆயிரம் விளக்குப் பகுதியில் நெடுஞ்சாலைத் துறையின் சுரங்கப்பாதைக்கு அருகில் உள்ள பயன்படுத்தப்படாத கட்டிடத்தை இடிக்கும் பணியின் போது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பிரியா என்ற பெண் மீது கட்டிட இடுபாடுகள் விழுந்துள்ளன. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் அருகில் இருந்த பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து கட்டிட இடுபாடுகளுக்குள் சிக்கிய பிரியாவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி பிரியா உயிரிழந்தார். பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 3 பேரை தேடி வருகின்றனர்.