சென்னையை அடுத்த மாதவரம், சாஸ்திரி நகர், இரண்டாவது குறுக்கு சாலை பகுதியில் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா வசித்து வருகிறார். இவரின் எதிர் வீட்டில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியருக்கும் நித்யாவுக்கும் அடிக்கடி காரை நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்தநிலையில் ஓய்வு பெற்ற ஆசிரியரின் காரை யாரோ சேதப்படுத்தினர். அதனால் ஓய்வு பெற்ற ஆசிரியர், மாதவரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து போலீஸார் அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவில் நித்யா, கற்களைக் கொண்டு ஓய்வு பெற்ற ஆசிரியரின் காரை சேதப்படுத்தும் காட்சி பதிவாகியிருந்தது.
அதன் அடிப்படையில் மாதவரம் போலீஸார் நித்யாவிடம் விசாரணை நடத்தினர். பின்னர், பிறர் சொத்துக்கு சேதம் விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் நித்யா மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நித்யா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.