சிவகாசி: சிவகாசி மாநகராட்சி கவுன்சிலர்கள் கருத்துகேட்பு கூட்டம் பழைய நகராட்சி கட்டித்தில் நடைபெற்றது. மேயர் சங்கீதா தலைமை வகித்தார். துணை மேயர் விக்னேஷ்பிரியா முன்னிலை வகித்தார்.
சிவகாசி மாநகராட்சியில் நடைபெறும் மாதாந்திர கவுன்சில் கூட்டத்தில் கவுன்சிலர்கள் பல்வேறு பிரச்சினைகளை கிளப்பி வாக்குவாதத்தில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது. கடந்த கவுன்சில் கூட்டத்தில் திமுக கவுன்சிலர் அதிகாரிகள் மீது லஞ்ச புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் இந்த மாத கவுன்சில் கூட்டம் ஜனவரி 31-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, சர்ச்சைகளை தவிர்க்கும் வகையில் கவுன்சிலர்கள் உடனான கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
கூட்டத்தில் திமுக, பாஜக, மதிமுக, மற்றும் சுயேச்சை என 30 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து விவாதம் நடைபெற்றபோது பாஜக கவுன்சிலர் குமரி பாஸ்கருக்கும், மதிமுக கவுன்சிலர் சீனிவாசக ராகவனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின் வெயில்ராஜ்(திமுக), சீனிவாசக ராகவன்(மதிமுக) இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து சிவகாசி நகர் காவல் நிலையத்தில் மதிமுக கவுன்சிலர் சீனிவாச ராகவன், திமுக கவுன்சிலர் வெயில்ராஜ் தகாத வார்த்தையால் பேசி தனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று புகார் அளித்தார்.