புதுடெல்லி: கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்ற மக்களவையில், பெண்களின் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக அதிகரிக்க வகை செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, இந்த மசோதா குறித்து ஆராய நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
கல்வி, பெண்கள் நலன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு ஆகிய விவகாரங்கள் மீதான நிலைக் குழுவுக்கு பாஜகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் விவேக் தாக்குர் தலைவராக உள்ளார்.
இக்குழு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சிறுபான்மையினர் நலன், பழங்குடியினர் நலன் மற்றும் தொழிலாளர் நலன் ஆகிய துறை அமைச்சகங்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. மேலும் இது தொடர்பாக தொண்டு நிறுவனங்கள் மற்றும் துறை சார்ந்த அமைப்புகள் அனுப்பிய பரிந்துரைகளையும் நிலைக் குழு ஆய்வு செய்து வருகிறது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் தனிநபர் சட்டங்கள், பழங்குடியினர் மரபு உட்பட பல்வேறு அம்சங்கள் பற்றி விரிவாக ஆராய நிலைக்குழு திட்ட மிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விவகாரத்தில் அறிக் கையை தாக்கல் செய்ய வழங்கப்பட்ட காலக்கெடு பல முறை நீட்டிக்கப்பட்டது. கடைசியாக கடந்த 24-ம் தேதி முடிய இருந்தகாலக்கெடு வரும் ஏப்ரல் 24வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.