பெரம்பலூர் மாவட்டத்தில் ஆம்னி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
திருச்சியில் இருந்து நேற்று இரவு ஆம்னி பேருந்து ஒன்று பயணிகளுடன் பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இப்பேருந்தை பூவாளூர் பகுதியை சேர்ந்த பசுபதி (29) என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் இன்று அதிகாலை இரண்டு மணியாளவில் வேப்பந்தட்டை பெட்ரோல் பங்க் அருகே பேருந்து சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், பேருந்து இடுபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 18 பேர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஓட்டுநர் உட்பட ஐந்து பேர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பித்தனர்.
இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.