
போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டு தெரிவித்துள்ளது.
கஞ்சா விற்பனை செய்த வழக்குகளில் ஜாமீன் கோரிய மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதி புகழேந்தி, தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்தார்.
கஞ்சா போன்ற பொருட்களை மருத்துவ காரணம் தவிர்த்து உற்பத்தி செய்ய, தயாரிக்க, விற்பனை செய்ய மற்றும் உபயோகப்படுத்த தடை உள்ளதாக குறிப்பிட்டார்.
போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்கு அதிகளவில் அபராதமும், தண்டனையும் விதிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 10 ஆண்டும் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது.

தொடர் குற்றங்களில் ஈடுபட்டதாக சில வழக்குகளில் மரண தண்டனை கூட வழங்கப்பட்டுள்ளது. கஞ்சா வழக்குகளில் குறிப்பிட்ட காலத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படாததால் வணிக ரீதியான விற்பனை செய்து கைதானோர் ஜாமீன் பெறும் நிலை உள்ளது.
தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை ஒழிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது. இதற்குத் தேவையான சுற்றறிக்கைகள் அவ்வப்போது வெளியிடப்பட்டுள்ளது.
3 மாதங்களில் 10,673 வழக்குகள் பதியப்பட்டு 149.43 டன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என நீதிபதி கூறினார்.

போதைப் பொருள் வழக்குகளில் உடனடியாக வழக்குப் பதிவதோடு மட்டுமின்றி குறிப்பிட்ட காலத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை பாதுகாப்பது உள்ளிட்டவை தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்த கஞ்சாவை பாதுகாப்பதற்கான பாதுகாப்பு அறைகள் சென்னை, திருச்சி, மதுரை, தேனி மற்றும் கோவையில் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு சாவி முறை பின்பற்றப்படுகிறது.
சென்னையில் போதைப் பொருள் ஒழிப்பு குழுவும் டிஐஜிக்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், புதுக்கோட்டை மாவட்ட போதைப் பொருள் சிறப்பு நீதிமன்ற வரம்பிற்குள் உள்ளது. டிஐஜியின் சுற்றறிக்கை முறையாக பின்பற்றப்படும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது என தெரிவித்தார்.
newstm.in