காந்திநகர்: குஜராத் மாநிலம் மோர்பி நகரில் பிரபலமான தொங்கு பாலம் இருந்தது. இதனை கண்டுகளிக்க கடந்த ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி ஏராளமானோர் பாலத்தில் திரண்டனர். இதையடுத்து, அந்த பாலம் பாரம் தாங்காமல் அறுந்து விழுந்தது. இதில், 135 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இதனிடையே இந்த பாலத்தை பழுதுபார்க்கும் பணிக்கான ஒப்பந்தத்தை 2022 மார்ச் மாதத்தில் ஒரேவா குழுமம் மோர்பி நகராட்சியிடமிருந்து பெற்றது. பல மாதங்களாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி தொங்கு பாலம் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இந்த நிலையில் நான்கே நாட்களில் பாலம் அறுந்து விழுந்து கோர விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தர விடப்பட்டது. இந்த நிலையில் ராஜ்கோட் ஐஜி அசோக் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மோர்பி தொங்கு பால விபத்தில் முக்கிய குற்றவாளி ஒரேவா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெயசுக் படேல் தான் என்பது போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் 1,262 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஜெயசுக் படேல் பெயர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கெனவே கைது செய்யப்பட்ட 9 பேரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.