யுடியூப் விமர்சகரை திட்டியது ஏன்? : உன்னி முகுந்தன் விளக்கம்

தமிழில் தனுஷ் நடித்த சீடன் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்தவர் மலையாள நடிகர் உன்னி முகுந்தன். அதன்பிறகு பாகமதி, சமீபத்தில் வெளியான யசோதா உள்ளிட்ட படங்களில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானார். ஒரு தயாரிப்பாளராகவும் மாறி கடந்த வருடம் வெளியான மேப்படியான், ஷபீக்கிண்டே சந்தோஷம் இந்த வருடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான மாளிகப்புரம் என தான் நடிக்கும் படங்களையும் தயாரித்து வருகிறார். இந்த மூன்று படங்களுமே வெற்றி பெற்று மிகப் பெரிய அளவில் வசூலையும் அள்ளிக் கொடுத்தன. குறிப்பாக சமீபத்தில் வெளியான மாளிகப்புரம் திரைப்படம் இரண்டரை கோடி பட்ஜெட்டில் தயாராகி 50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

இந்த நிலையில் யுடியூப் சேனல் ஒன்றில் விமர்சகர் ஒருவர் இந்த படம் குறித்து மிகவும் தரம் தாழ்ந்து விமர்சித்ததாக கூறி அவருடன் வாக்குவாதத்தில் உன்னி முகுந்தன் ஈடுபட்ட ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் நடிகர் உன்னி முகுந்தன் அந்த விமர்சகரை சற்று காட்டமான வார்த்தைகளில் திட்டி இருந்தார். இந்த நிலையில் தற்போது இது குறித்து விளக்கம் அளித்துள்ளார் உன்னி முகுந்தன்.

இதுபற்றி அவர் கூறும்போது, “திரைப்படங்களை விமர்சிப்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. அவர்கள் காசு கொடுத்து படம் பார்க்கிறார்கள். அதேசமயம் படத்தில் சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் பேசுவதற்கு யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. அந்த நபர் படத்தில் நடித்த சிறு குழந்தையை வைத்து ஐய்யப்பன் என்கிற பெயரில் நான் வியாபாரம் செய்துள்ளதாக கூறியுள்ளார்.

அதுமட்டுமல்ல எனது பெற்றோர் பற்றியும் படத்தில் நடித்த அந்த சிறு குழந்தையையும் அவர் விமர்சித்துள்ளார். எனது பெற்றோர் பற்றி விமர்சிக்க அவருக்கு எந்த உரிமையும் இல்லை.. ஒரு மகனாக எனக்கு எழுந்த கோபம் தான் அப்படி கடுமையான வார்த்தைகளாக வெளிப்பட்டது. நான் கோபமாக பேசினேன் என்பது உண்மைதான் என்றாலும் நான் பேசியதில் உறுதியாக நிற்கிறேன். இதற்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்க போவதில்லை.

அதேசமயம் நான் பேசிய விதம் என்னுடைய ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் யாருக்காவது சங்கடத்தை ஏற்படுத்தி இருந்தால் அவர்களிடம் என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இது எனது கடமை என்பதால் தானே தவிர எனது பலவீனம் என்பதால் அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார் உன்னி முகுந்தன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.