வாங்கிய கடனை விட அதிக வட்டி; ஏதேதோ காரணம் சொன்ன நிதிநிறுவனம்: தற்கொலைக்கு முயன்ற முதியவர்!

வாங்கிய கடன் தொகையை விட அதிக வட்டி கேட்பதாக தனியார் நிதி நிறுவனத்திற்கு உள்ளேயே, தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற முதியவரால் தேனியில் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சுப்ரமணி (60). இவர் பழனிசெட்டிபட்டி பகுதியில் இயங்கும் தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வீட்டின் பேரில் 2 லட்சத்து 90,000  ரூபாய் அடமான கடனை 60 மாத தவணையில் வாங்கியிருக்கிறார்.‌
image
இதனையடுத்தும் 43 மாதங்களாக தொடர்ச்சியாக 3 லட்சத்து 60,000 ரூபாய் வரை கடன் தவணை செலுத்திய நிலையில், தனது கடனை முழுவதும் செலுத்த இருப்பதாக சுப்ரமணி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் நிதி நிறுவனத்தினர் கொரோனா காலத்தில் சரிவர தவணை செலுத்தவில்லை எனவும், அதனால் அபராதத்துடன் கூடுதலாக 1 லட்சத்து 40,000 ரூபாய் வரை வட்டி செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
image
அதனை ஏற்க மறுத்த சுப்ரமணி, பழனிசெட்டிபட்டியில் உள்ள நிதி நிறுவனத்திற்கு நேரில் சென்று அபராதத்தை தவிர்த்து, தான் கட்ட வேண்டிய பணத்தை செலுத்துவதாக கூறியுள்ளார். அதற்கு நிதி நிறுவனத்தார் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன விரக்தியடைந்த சுப்ரமணி நேற்று (ஜன.,27) மாலையில் இருந்து நிதி நிறுவனத்தை விட்டு வெளியே போகாமல் அலுவலகத்திற்குள் உள்ளேயே அமர்ந்தவர், இரவு தான் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.‌
image
பின்னர் தகவலறிந்து வந்த பழனிசெட்டிபட்டி போலீசார் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே இந்த சம்பவம் குறித்து அறிந்த தேனி மாவட்ட பாஜகவினர், முதியவரை தற்கொலைக்கு தூண்டிய நிதி நிறுவனத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அங்கிருந்த போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.‌ இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.