புதுடெல்லி: கோதுமை மற்றும் கோதுமை மாவின் விலை உயர்வு குறித்து பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்த நிலையில் வெளிச்சந்தையில் அவற்றை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்திய உணவுக் கழகத்திடம் மத்திய தொகுப்பின் கையிருப்பில் இருந்து 30 லட்சம் டன் கோதுமையை வெளிச் சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பி வைப்பதாக மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.
இதன் எதிரொலியாக, வெளிச் சந்தையில் கோதுமையின் விலை கிலோவுக்கு ரூ. 5 முதல் ரூ.6 வரை குறையும் என்று அரவையாளர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த 2 மாதங்களுக்கு பல்வேறு இடங்களிலிருந்து கோதுமையை வெளிச் சந்தையில் விற்பனைக்கு அனுப்ப உள்ளதாக என இந்திய உணவுக் கழகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு புள்ளி விவரப்படி, கடந்த ஆண்டில் ரூ.28.24-ஆக இருந்த ஒரு கிலோ கோதுமையின் விலை ரூ.33.43-ஆக அதிகரித்தது. அதேபோன்று, கோதுமை மாவின் விலையும் கிலோ ரூ.31.41-லிருந்து ரூ.37.95-ஆக உயர்ந்தது.
தற்போது கோதுமை மொத்த, சில்லறை விற்பனை சந்தையில் ரூ.6 வரை குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜன. 1-ஆம் தேதி நிலவரப்படி உணவுக் கழககிடங்குகளில் 171.70 லட்சம் டன்கோதுமை கையிருப்பில் உள்ள தாக மதிப்பிடப்பட்டுள்ளது.