தஞ்சாவூர், காந்திஜி சாலையில் `அசோகன் தங்கமாளிகை’ என்ற நகைக்கடை 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. அதன் உரிமையாளர் சுந்தரபாண்டியன். காந்திஜி சாலையில் இயங்கி வந்த கடைக்கு, பின்னர் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி உள்ளிட்ட பல ஊர்களில் கிளைகள் தொடங்கப்பட்டன. நகை சிறுசேமிப்பு திட்டம், வங்கியில் அடகு வைத்த நகைகளை அவர்களே பணம் செலுத்தி திருப்பி வட்டி இல்லாமல் அடகு வைத்துக் கொள்வது போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களை பல வருடங்களாகச் செயல்படுத்தி வந்தார் சுந்தரபாண்டியன்.

இந்த நிலையில், ஒரத்தநாட்டில் அடகு வைத்த நகைகளை சிலர் மீட்கச் சென்றிருக்கின்றனர். ஆனால் கடையிலிருந்த நகை மற்றும் வெள்ளிப் பொருள்கள் அனைத்தும் எடுத்துக்கொண்டு கடையை காலி செய்திருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் எங்கும் பரவ, கடையில் நகை மற்றும் சிறுசேமிப்பு திட்டத்தில் சேர்ந்திருந்த பலரும் கடை முன் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ஒரத்தநாடு போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அசோகன் தங்கமாளிகையின் அனைத்து கடைகளையும் பூட்டிவிட்டு அதன் உரிமையாளர் தலைமறைவாகிவிட்டார். இதன் மூலம், அவர் பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதும் தற்போது தெரியவந்திருக்கிறது. கடை இருந்த அனைத்து ஊர்களிலும் ஏமாற்றப்பட்ட வாடிக்கையாளர்கள் புகார் கொடுப்பது தொடர்கிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
இது குறித்து சிலரிடம் பேசினோம். “அசோகன் தங்கமாளிகை உரிமையாளர் சுந்தரபாண்டியன் பல கவர்ச்சிகரமான திட்டங்களைச் செயல்படுத்தினார். தினமும் ரூ.100 கட்டினால் ஒரு வருடம் நிறைவடைந்தப் பிறகு வட்டியுடன் சேர்த்து 39,000 திருப்பி தரப்படும், நகை வாங்குபவர்கள் முன்கூட்டியே ஆர்டர் கொடுத்தால் ஹோல்சேல் விலைக்கே நகை தரப்படும் என்பது போன்ற திட்டங்களைச் செயல்படுத்தினார்.

குறிப்பாக வேறு இடத்தில் அடகு வைத்த நகையை வட்டியுடன் அவர்களே திருப்பி வட்டியில்லாமல் அடகு வைத்துக் கொள்வார்கள். இதில்தான், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஏமாந்திருக்கின்றனர். ஐந்து பவுன் தொடங்கி நூற்றுக்கும் மேற்பட்ட பவுன் வரை அடகு வைத்திருந்தவர்களின் நகைகளை ஒப்பந்த அடிப்படையில் திருப்பி அடமானம் பிடித்திருக்கிறார். மூன்று வருடங்கள், ஐந்து வருடங்களில் திருப்பிக் கொள்ள வேண்டும், ஒரு பைசாகூட வட்டி கிடையாது. இதில் பல கிளைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நகை அடகு வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதே போல் நகை சிறுசேமிப்பு திட்டத்தில் பணம் கட்டும் நபர்களுக்கு குலுக்கலில் மனை வழங்குவதாகக் கூறி ஆயிரக்கணக்கானவர்களை சேர்த்திருக்கிறார்.
கடந்த சில மாதங்களாகவே நகை அடகு வைத்தவர்கள் திருப்பச் சென்றபோது, நகையைத் தராமல் பல காரணங்களை சொல்லி அலையவிட்டிருக்கின்றனர். மாதாக்கோட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர் ஐந்து வருடங்களுக்கு முன்பு 75 பவுன் நகையை ரூ.15 லட்சத்துக்கு அடகு வைத்திருக்கிறார். பணத்துடன் திருப்பச் சென்ற அவரிடம் ஊழியர்கள் முறையான பதில் கூறவில்லை. உரிமையாளர் சுந்தரபாண்டியனையும் சந்திக்கவிடவில்லை.

கடை ஊழியர்கள் சிலரே, தி.மு.க பிரமுகர் ஒருவர் பெயரைச் சொல்லி, `அவரைப் பாருங்கள்’ எனக் கூறியிருக்கின்றனர். ஆனால் இப்போது வரை அந்தப் பெண்ணுக்கு நகை கிடைக்கவில்லை. இதே போல் பலர் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். கடை உரிமையாளர் திட்டமிட்டு இந்த மோசடியை செய்திருப்பதாகத் தெரிகிறது. பல கோடி ரூபாய் வசூல் செய்துவிட்டு, அவரது நகைக்கடையிலிருந்த தங்கநகை, வெள்ளிப் பொருள்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டார்.
தஞ்சாவூரிலுள்ள கடையில் பல கோடி ஏமாற்றம், கடையை மூடிவிட்டு ஓட்டம் என போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட பலரும் நகைக்கடை முன் திரண்டதுடன், காவல் நிலையங்களிலும் புகார் அளித்து வருகின்றனர்” என்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில், “அசோகன் தங்கமாளிகையின் உரிமையாளர் சுந்தரபாண்டியன், கடந்த 15 நாள்களாகவே கடைகளில் இருந்த நகை மற்றும் வெள்ளிப் பொருள்களை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சென்றிருக்கிறார்.

தலைமறைவாகும் திட்டத்துடன் அவர் இதனை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. ஒரத்தநாடு காவல் நிலையத்தில் மட்டும் 421 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன” என்றனர். இது தொடர்பாக பட்டுக்கோட்டை கிளையின் மேனேஜர் விக்னேஷ்வரன் கைதுசெய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.