நாமக்கல்: உதயநிதி கலந்துகொண்ட அரசு விழாவில் மின் திருட்டா?- என்ன சொல்கிறார்கள் விழா ஏற்பாட்டாளர்கள்?

நாமக்கல் மாவட்டத்திலுள்ள பொம்மைக்குட்டைமேட்டில் நடைபெற்ற அரசு விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டதோடு, ரூ.23.71 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார். மேலும், ரூ.351.12 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,03,321 பயனாளிகளுக்கு ரூ. 303.37 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியை, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், தி.மு.க கிழக்கு மாவட்டச் செயலாளரும், ராஜ்ய சபா எம்.பி-யுமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் உள்ளிட்டோர் பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தனர். சமீபத்தில் அரசியல் கட்சிகள் நிகழ்ச்சிகள், அரசு நிகழ்ச்சிகள் நடைபெறும் இடமாக பொம்மைக்குட்டைமேட்டிலுள்ள இந்த இடம் மாறியிருக்கிறது. நாமக்கல் – சேலம் பைபாஸில் இந்த இடம் அமைந்திருப்பதால், இங்கு நடத்தப்படும் விழாக்களுக்கு வருபவர்கள் எளிதாக வரமுடியும் என்பதால், விழா நடத்துபவர்களின் விருப்ப இடமாக இந்த இடம் மாறியிருக்கிறது.

மின்திருட்டு?

அந்த வகையில்தான், உதயநிதி அமைச்சரானப் பிறகு, அவரை வைத்து நாமக்கல்லில் பிரமாண்டமாக அரசு நிகழ்ச்சி, மூத்த கழக நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்த, மாவட்டச் செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் நினைத்தார். அதன்படிதான், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை, பொம்மைக்குட்டைமேட்டில் நடத்தினார். அங்குள்ள இடத்தில் பொதுப்பணித்துறை சார்பில் விழா மேடை அமைக்கப்பட்டது.

இந்த விழாவில் கலந்துகொண்ட உதயநிதி, “கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்கு தி.மு.க உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டை நடத்திய கே.ஆர்.என்.ராஜேஸ்குமாரை முதல்வர் ஸ்டாலின், ‘நிகழ்ச்சியை மாநாடு போல் பிரமாண்டமாக நடத்துவதில் ராஜேஸ்குமார் பாஸ் ஆகிவிட்டார். இல்லை இல்லை, பாஸ் ஆனார் என்பதைவிட, முதல் மதிப்பெண் பெற்றுவிட்டார்’ என்று பாராட்டினார். தற்போதும், அவர் முதல் மதிப்பெண் பெற்றிருக்கிறார். இனி, எல்லா நிகழ்ச்சிகளிலும் அவர் முதல் மதிப்பெண் பெறுவார்” என்று பாராட்டிப் பேசினார். இந்த நிலையில், விழா மேடைக்குப் பின்புறம் இருந்த தமிழ்நாடு மின்சார வாரியத்துக்குச் சொந்தமான மின்கம்பத்திலிருந்து கொக்கிப் போட்டு மின்சாரம் திருடியதாக சர்ச்சை எழுந்திருக்கிறது. அது சம்பந்தமான வீடியோவும் வெளியாகி, பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், இப்படி சட்டத்தை மீறி மின்சாரத்தை திருடலாமா என்று கடும் விமர்சனம் எழுந்திருக்கிறது.

அரசு விழாவில் உதயநிதி

இது பற்றி மின்வாரிய அதிகாரிகள், “அரசு விழாவுக்கு, மின்சார வாரியத்தால் எந்தவிதமான தற்காலிகமான இன் இணைப்பும் வழங்கப்படவில்லை. விசாரணை நடத்தப்படும்” என்று மட்டும் தெரிவித்திருக்கின்றனர். தி.மு.க நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், ராஜ்யசபா எம்.பி-யுமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் தரப்பில் விசாரித்தோம்.

“இது அரசு விழா. விதிகளுக்குட்பட்டே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. மின்சாரம் திருடப்படவில்லை. இந்த நிகழ்ச்சி வெகு பிரமாண்டமாக நடைபெற்றதை பொறுக்காத விஷமிகள், ‘மின்சாரம் திருடப்பட்டது’ என பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். இந்த விழாவில் ஒரு சதவிகிதம்கூட விதிகளையோ, சட்டத்தையோ மீறும் செயல்பாடுகள் எங்கும் நடைபெறவில்லை. சிலர், தங்களுக்கு வாய்க்கு மெல்ல அவல் கிடைக்குமா என இப்படி நடக்காத விஷயத்தை நடந்ததாகக் காட்டி, ஊதி பெரிதாக்கப் பார்க்கிறார்கள்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.