காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நடத்தி வந்த பாரத் ஜோடா யாத்திரை எனப்படும் இந்திய ஒற்றுமை நடைபயணம் நாளை ஸ்ரீநகரில் நிறைவடைகிறது. இதற்காக காங்கிரஸ் கட்சி பிரம்மாண்ட கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் யாத்திரையை தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், இமாச்சலப்பிரதேசம் ஆகிய 13 மாநிலங்களில் நடை பயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி கடந்த 19ஆம் காஷ்மீர் சென்றடைந்தார்.
நாடு முழுவதும் ராகுல் காந்தி மேற்கொண்ட நடைபயணத்தில் அரசியல் தலைவர்கள், முன்னால் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள், திரைப்பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக்கில் ராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நாளை நடைபெறும் பாரத் ஜோடோ யாத்திரையின் நிறைவு விழாவில் 12 எதிர்க்கட்சிகள் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக, தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா, சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கேரள காங்கிரஸ், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு, ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் ஸ்ரீநகரில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளும் என தெரிகிறது.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான யாத்திரையில் ராகுல் காந்தி 3,970 கிமீ, 12 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களை சுமார் 145 நாட்களில் கடந்துள்ளார். இதன் நிறைவு விழா நாளை ஸ்ரீநகரில் நடைபெறுகிறது.
newstm.in