ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த ஓட்டுநரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ்(28). இவர் தனியார் ஷூ கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சுந்தர்ராஜ்க்கும், அதே கம்பெனியில் சில மாதங்கள் வேலை பார்த்த 14 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சிறுமி வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டு பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று சுந்தர்ராஜ், சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை கொடைக்கானலுக்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து சிறுமி காணவில்லை என்பதால் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர்.
ஆனால் சிறுமி கிடைக்காததால் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சிறுமியையும் சுந்தரராஜனையும் கொடைக்கானலில் கண்டுபிடித்தனர். இதையடுத்து ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் சுந்தர்ராஜனை கைது செய்தனர். பின்பு அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.