டெல்லியில் கட்டுப்படுத்த முடியாத மாசு அதிகரிப்பால், 15 வருடங்கள் பழைமையான பெட்ரோல் வாகனங்களுக்கும், 10 ஆண்டுகள் பழைமையான டீசல் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பழைய வாகனங்களில் இருந்து வெளியேறும் அதிகப்படியான புகை, சுற்றுச் சூழலின் பாதிப்பை அதிகரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த விதியை அடுத்து, டெல்லியில் சுமார் ஐம்பது லட்சம் வாகனங்கள் பதிவு நீக்கம் (Deregistration) செய்துள்ளனர். பதிவு நீக்கம் செய்யப்பட்ட வாகனங்களை உரிமையாளர்கள் வேறு மாநிலங்களில் விற்கலாம், விற்பனையாளர்களிடம் பழைய காரை விற்று புதிய கார் வாங்கிக் கொள்ளலாம் அல்லது அந்த காரை மொத்தமாக அழித்துவிடலாம். இந்த விதி டெல்லியில் பதிவாகியுள்ள வாகனங்களைத் தாண்டி, டெல்லி வழியே செல்லும் எல்லா வாகனங்களுக்கும் பொருந்தும்.

இந்த உத்தரவை மதிக்காமல் பழைய கார்களை சாலைகளில் இயக்கினால், காவல்துறையினர் உடனடியாக அந்த வாகனங்களைப் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பார்கள். மேலும், அந்த வாகனத்தின் உரிமையாளர், குறைந்தபட்சம் 15,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
அதேநேரம், வயதானவர்கள் பலர் இந்தப் புதிய விதிமுறையால் மிகவும் பாதிப்படைவதாகக் கூறியுள்ளனர். இது குறித்து Change.org எனும் அமைப்பில் டெஜிந்தர் பேடி என்பவர் தொடர்ந்துள்ள மனுவில், “எனக்கு 69 வயது ஆகிறது. நான் வேலையில் இருந்து ஓய்வு பெற்றதும், மாருதி சுஸூகி SX4 வாகனத்தை ஒருவரிடமிருந்து வாங்கினேன். அது 2008-ல் பதிவு செய்யப்பட்ட கார்.
இப்போது இருக்கும் புதிய விதியின்படி, என்னுடைய காரின் பதிவு 2023 மே மாதம் காலாவதி ஆகிவிடும். இந்த வயதில், என்னுடைய ஓய்வு காலத்தில் என்னால் எப்படி ஒரு புதிய வாகனத்தை வாங்க முடியும்? இந்த கார் நான் இருக்கும் வரை என்னுடன் பயணிக்கும் என்று நினைத்தேன்.
வயதானவர்கள் தங்களுடைய வாகனத்தை தினமும் பயன்படுத்துவது கிடையாது. எப்போதாவது மருத்துவமனைக்குச் செல்ல, வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்க என்று குறைவாகவே பயன்படுத்துகிறார்கள். அதனால் அரசாங்கம், டெல்லியில் வயதானவர்களுக்கு இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இவருடைய இதே கோரிக்கையைத்தான் டெல்லியில் வாழும் பல வயதானவர்களும் கூறியிருக்கிறார்கள். வயதானவர்கள் ஏற்கெனவே மாதாமாதம் மருத்துவச் செலவுகளில் அவதிப்பட்டு வருகிறார்கள். தினமும் உயரும் விலைவாசி வேறு அவர்களை இன்னும் பாதிக்கிறது. இதற்கிடையே புதிய வாகனம் வாங்க வேண்டும் என்றால் அது எப்படி சாத்தியமாகும் என்கின்றனர் டெல்லியின் சீனியர் சிட்டிசன்ஸ்.
அதனால் ”மூத்த குடிமக்களுக்கு மட்டும் 15 வருடமாக இருக்கும் கெடுவை இன்னும் ஐந்து வருடங்களாக அதிகரித்து 20 ஆண்டுகளாக்க வேண்டும் என்றும், வயதானவர்களின் பெயரில் இருக்கும் வாகனத்தை குடும்பத்தில் இருக்கும் மற்ற இளைஞர்கள் பயன்படுத்தினால் அப்போது அவர்களின் பதிவை ரத்து செய்யலாம்” என்று கோரிக்கை வைத்துள்ளார் டெஜிந்தர் பேடி.