சென்னை சோழிங்கநல்லூர் காந்தி நகரில் டாக்டர் சதீஷ்குமார் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக கிளினிக் நடத்தி வருகிறார். கடந்த 28.01.2023-ம் தேதி இரவு கிளினிக்கை சதீஷ் மூட தயாரான போது அங்கு இரண்டு பேர் வந்தனர். அவர்களில் ஒருவன் தனக்கு காலில் அடிப்பட்டிருக்கிறது என்று டாக்டரிடம் கூறினான். உடனே டாக்டர் சதீஷ்குமார், அந்த நபருக்கு சிகிச்சை அளித்தார். அப்போது திடீரென ஒருவன், மறைத்து வைத்திருந்த பெப்பர் ஸ்பீரேயை சதீஷ்குமாரின் முகத்தில் அடித்தார். அதனால் அவர் நிலைதடுமாறினார். இதையடுத்து, இருவரும் சேர்ந்து கத்தி முனையில் சதீஷ்குமாரை மிரட்டி, அவரிடமிருந்த 20,000 ரூபாயைப் பறித்தனர். பின்னர் டிரைவரின் காரை திருட அவரிடமிருந்த சாவியையும் மிரட்டி வாங்கினர்.

இதையடுத்து, நடந்த சம்பவங்கள் சிசிடிவியில் பதிவாகமல் இருக்க அதிலிருந்த ஹார்டு டிஸ்கையும் கொள்ளையர்கள் எடுத்துக் கொண்டனர். பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். கொள்ளையர்களின் பிடியிலிருந்து தப்பிய டாக்டர் சதீஷ்குமார், திருடன், திருடன் எனக் கூச்சலிட்டார். அதைக் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு திரண்டனர். அப்போது கிளினிக்கிலிருந்து இரண்டு பேர் தப்பி ஓடுவதைப் பார்த்த பொதுமக்கள் அவர்களை விரட்டிச் சென்றனர். இந்தச் சமயத்தில் அவ்வழியாக வந்த வாகனத்தில் மோதி கொள்ளையர்களில் ஒருவன் கீழே விழுந்தான். உடனடியாக அங்குச் சென்ற பொதுமக்கள் அவனைப் பிடித்தனர். பின்னர் செம்மஞ்சேரி காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீஸ் உதவி கமிஷனர் ரியாசுதீன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ராகவன் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போது கொள்ளையனை போலீஸாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். டாக்டரிடம் பெப்பர் ஸ்பீரேயை அடித்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கமிஷனர் அமல்ராஜிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர், கொள்ளையர்களைப் பிடிக்க இணை கமிஷனர் மூர்த்தி, துணை கமிஷனர் ஜோஸ் தங்கையா ஆகியோருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் பொதுமக்கள் ஒ்ப்படைத்த கொள்ளையனிடம் போலீஸார் விசாரித்தபோது, அவனின் பெயர் பிரகாஷ் எனத் தெரியவந்தது. அவனிடம் விசாரித்தபோது இன்னொரு கொள்ளையனின் பெயர் பிரதாப் எனத் தெரிந்தது. இதையடுத்து பிரகாஷ் அளித்த தகவலின்படி, பிரதாப் மற்றும் அவனோடு தங்கியிருந்த வெற்றிச் செல்வன், சத்யசீலன் ஆகியோரை போலீஸார் சம்பவம் நடந்த 4 மணி நேரத்திலேயே கைதுசெய்தனர். அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து துப்பாக்கி ஒன்றையும் போலீஸார் பறிமுதல்செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் டாக்டர் சதீஷ்குமாரிடம் கொள்ளையடிக்க திட்டம் போட்டுக் கொடுத்தது அவரின் நண்பரான சத்யசீலன் என்ற தகவலும் தெரியவந்தது.

இது குறித்து போலீஸார், “டாக்டர் சதீஷ்குமாருக்கும் கைதுசெய்யப்பட்ட சத்யசீலனுக்கும் நீண்ட காலமாக பழக்கம் இருந்து வந்திருக்கிறது. சத்யசீலன், மருந்தகம் நடத்தி வருகிறார். அதனால் அவரிடமிருந்து டாக்டர் சதீஷ்குமார் மருந்து, மாத்திரைகளை வாங்கி வந்திருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே பிசினஸ் தொடர்பாக கொடுக்கல் வாங்கல் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில்தான் டாக்டர் சதீஷ்குமாரிடம் எப்போதும் லட்சக்கணக்கில் பணம் இருக்கும் என்பது சத்யசீலனுக்கு தெரியும். அதனால்தான் கடலூரைச் சேர்ந்த பிரதாப், பிரகாஷ் மற்றும் வெற்றிச் செல்வன் ஆகியோர் மூலம் டாக்டர் சதீஷ்குமாரை மிரட்டி கொள்ளையடிக்க சத்யசீலன் திட்டமிட்டிருக்கிறார். கைதுசெய்யப்பட்ட பிரதாப்பும், பிரகாஷும் அண்ணன் தம்பிகள். இவர்கள் இருவர் மீதும் கடலூர் மாவட்டத்தில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
டாக்டர் சதீஷ்குமாரிடம் கொள்ளையடிப்பதற்கு முன்பு நெய்வேலி பகுதியில் ஒரு குற்றச் சம்பவத்தில் பிரதாப், பிரகாஷ் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்போது போலீஸ் எஸ்.ஐ ஒருவரிடம் இருவரும் சிக்கிக் கொண்டனர். அதனால் போலீஸ் எஸ்.ஐ-யை துப்பாக்கியால் தாக்கி இருவரும் தப்பித்து சென்னை வந்திருக்கிறார்கள். அதன் பிறகுதான் டாக்டரிடம் பணத்தைக் கொள்ளையடித்திருக்கிறார்கள். இந்த வழக்கில் சத்யசீலன், வெற்றிச் செல்வன், பிரகாஷ், பிரதாப் ஆகிய நான்கு பேரையும் கைதுசெய்து அவர்களிடமிருந்து பெப்பர் ஸ்பிரே, துப்பாக்கி, செல்போன், பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம். தொடர்ந்து இந்தக் கும்பலின் பின்னணி குறித்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.

இது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர், “சத்யசீலனின் மருந்தகத்தில் வெற்றிச் செல்வன் வேலைப்பார்த்து வருகிறார். சத்யசீலனும் வெற்றிச் செல்வனும் நீலாங்கரையில் மாதம் 20,000 ரூபாய் வாடகையில் வீடு எடுத்து தங்கி வந்திருக்கிறார்கள். பிரபல குற்றவாளிகளான பிரதாப், பிரகாஷ் ஆகியோருடன் சேர்ந்து சத்யசீலன் சில குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி, ஏர்கன் வகையைச் சேர்ந்தது. அதை பாண்டிச்சேரியிலிருந்து வாங்கியதாக தெரிவித்திருக்கிறார்கள். கைதானவர்களில் வெற்றிச் செல்வனைத் தவிர மற்றவர்கள் மீது வழிப்பறி, கொலை முயற்சி, ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்திருக்கிறது. ஏற்கெனவே கடலூர் மாவட்ட போலீஸார் இவர்களைத் தேடிக் கொண்டிருந்த சமயத்தில்தான் சென்னையில் பிரதாப், பிரகாஷ் சிக்கிக் கொண்டனர். அதனால் கடலூர் மாவட்ட போலீஸாரும் இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்திருக்கிறார்கள்” என்றார்.