திருமண பந்தத்தை மீறிய உறவு தொடர்பாக ராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்கலாம் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: இந்திய தண்டனை சட்டம் பிரிவு 497-ன்படி ஒருவர் திருமண பந்தத்தை மீறி வேறு ஒருவரின் மனைவியுடன் உறவு வைத்துக் கொள்வது குற்றமாக கருதப்படுகிறது. இதை எதிர்த்து கேரளாவின் ஜோசப் ஷைன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த 2018-ம் ஆண்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், ‘‘பெண்களின் சுதந்திரத்திலும் அடிப்படை உரிமையிலும் இந்த சட்டம் தலையிடுவதாக உள்ளது. கணவர் என்பவர் பெண்களின் எஜமானர் கிடையாது. இந்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது. எனவே கிரிமினல் பிரிவு 497 ரத்து செய்யப்படுகிறது. திருமணத்துக்கு எதிரான குற்றம் என்று கருதப்படும் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 198(2)-ம் ரத்து செய்யப்படுகிறது.

சிவில் சட்டப்படி குற்றம்: எனினும் சிவில் சட்டப்படி தகாத உறவு தவறானதாகவே கருதப்படும். திருமணத்துக்கு மீறிய உறவால் பாதிக்கப்பட்டோர் தற்கொலை செய்து கொண்டால் வழக்கு தொடரலாம்’’ என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை ஆதாரமாகக் கொண்டு, தகாத உறவு விவகாரத்தில் சிக்கும் ராணுவஅதிகாரிகள், வீரர்கள் தப்பிப்பதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை கடந்த 2021-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், பாதுகாப்புப் படை அதிகாரிகள், வீரர்களின் தகாத உறவு விவகார வழக்குகளில் ஜோசன் ஷைன் வழக்கு தீர்ப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதிகள் கே.எம்.ஜோசப், ரிஷிகேஷ் ராய், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ரவிகுமார் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து நேற்றுமுன்தினம் தீர்ப்பளித்தது. அதில், ‘‘ஜோசப் ஷைன் வழக்கின் தீர்ப்பு, கிரிமினல் பிரிவு 497 , குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 198(2) தொடர்பானது. இந்த தீர்ப்பு இந்திய ராணுவ சட்டம் பிரிவு 45, 63-க்கு பொருந்தாது. எனவே இந்த சட்ட விதிகளின்படி திருமண பந்தத்தை மீறிய விவகாரங்களில் பாதுகாப்புப் படை அதிகாரிகள், வீரர்கள் மீது அந்தந்த படைகளின் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலாம்’’ என்று உத்தரவிடப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.