மதுரை: ‘அமிர்த் பாரத்’ திட்டத்தில் மேலும், 15 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும் என மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் தெரிவித்தார்.
மத்திய நிதிநிலை அறிக்கையில் ரயில்வே திட்டம் குறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்பநாபன் அனந்த் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மத்திய அரசின் ‘அம்ரித் பாரத் ’ திட்டத்தின்படி பல்வேறு ரயில் நிலையங்களில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகின்றது. இதன்படி, அம்பாசமுத்திரம், காரைக்குடி, கோவில்பட்டி, மணப்பாறை, பழனி, பரமக்குடி, புனலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராஜபாளையம், சோழவந்தான், திருவில்லிபுத்தூர், தென்காசி, திருச்செந்தூர், விருதுநகர் ஆகிய 15 ரயில் நிலையங்களில் தேவையற்ற கட்டிடங் கள் இடித்தல், பிளாட்பாரம் உயரமாக்குதல், பயணிகள் உள்ளே, வெளியே செல்லும் நடைபாதைகள், பார்க்கிங், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி உட்பட பல்வேறு வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், இத்திட்டத்தின் மூலம் மதுரை கோட்டத்தில் 15 ரயில் நிலையங்கள் மேம்படுத்தும் திட்டம் உள்ளது. மதுரை – போடி ரயில் பாதை பணி 2023-24ம் ஆண்டு மார்ச்சுக்குள் முடியும். விருதுநகர் – தென்காசி, செங்கோட்டை- நெல்லை, செங்கோட்டை – பகவதி புரம், புனலூர்- எடமன் ரயில் பாதை பணிகளும் 2023 மார்ச்சுக்குள் முடிக்கப்படும். பயண நேரத்தை குறைக்கும் விதமாக பல்வேறு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பழைய பாம்பன் ரயில் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
புதிய பாம்பன் மேம்பால பணி ஜூன், ஜூலைக்குள் முடியும். அதுவரையிலும் ராமேசுவரத்திற்கு முன்பதிவு செய்த பயணிகள் மண்டபத்தில் இருந்து ரயில் மூலம் செல்வதற்கு பேருந்து ஏற்பாடு செய்யப்படும். இக்கோட்டத்தில் 9 ரயில் நிலையங்களில் பயணிகள் ரயில் பாதையை கடக்க, மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரை- திருமங்கலம் இரட்டை ரயில் பாதைகள் மறு சீரமைப்பு பணிகள் முடிந்தவுடன் மதுரை ரயில் நிலையத்திற்கு வெளியே தேவையின்றி ரயில்கள் நிற்காது. இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகள் மதுரை கோட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன” இவ்வாறு அவர் கூறினார்.
கோட்ட முதுநிலை ரயில் இயக்க மேலாளர் ராஜேஷ் சந்திரன், முதுநிலைக் கோட்ட பொறியாளர் ஆர். நாராயணன், முது நிலை கோட்ட வர்த்தக மேலாளர் ஆர். பி. ரதிப்பிரியா ஆகியோர் உடனிருந்தனர்.