அ.தி.மு.க ஒற்றைத் தலைமை விவகாரத்தில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அமைந்தாலும்கூட, இந்த விவகாரத்தில் இன்னும் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படாமல் நிலுவையிலேயே இருக்கிறது. இதன் காரணமாக தற்போது ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் யார் அதிகாரபூர்வமாகப் போட்டியிடுவார் என்பது குழப்பத்தை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளர் என்ற முறையில் தன்னுடைய கையொப்பத்தை அங்கீகரிக்கக் கோரியும், இரட்டை இலைச் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்குமாறும் தேர்தல் ஆணையம்மீது உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றமும் கடந்த திங்களன்று, எடப்பாடி பழனிசாமியின் மனுவுக்கு உடனடியாக பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

அதன்படி எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நேற்று பதிலளித்த தேர்தல் ஆணையம், `ஜுலை 11 அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு நிலுவையில் இருப்பதால், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. இரட்டை இலைச் சின்னம் குறித்த பழனிசாமியின் கோரிக்கை தொடர்பாகத் தேர்தல் அதிகாரி முடிவெடுப்பார். இரட்டை இலைச் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கக்கோரி யாரும் எங்களிடம் அணுகவில்லை’ என்று தெரிவித்தது. இந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்ட இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையில் நீதிபதிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்த தேர்தல் ஆணையம், `எடப்பாடி பழனிசாமி தரப்பு கோரிக்கைகளை ஏற்க முடியாது. இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படவில்லை. தேர்தல் விதிமுறைகள் அனைத்தும் நடைமுறைக்கு வந்துவிட்டன’ எனக் கூறி திங்கள்கிழமை வரை அவகாசம் கேட்டது.

அதைத் தொடர்ந்து விசாரணையில், `இருவரும் சேர்ந்து வேட்பாளரை அறிவித்தால், கட்சி விண்ணப்பத்தில் ஓ.பி.எஸ் கையொப்பமிடத் தயார்’ என ஓ.பி.எஸ் தரப்பு கூற, `எங்கள் தரப்பு அறிவிக்கும் வேட்பாளரை ஓ.பி.எஸ் ஏற்கவேண்டும். இல்லையெனில் பொதுவேட்பாளரைத்தான் ஏற்கமுடியும்’ என எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறியது.
பின்னர் இரு தரப்பையும் கேள்வியெழுப்பிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “இருதரப்பிலும் வேட்பாளர்கள் அறிவித்துள்ளீர்களா என்பது எங்களுக்கு தேவையில்லாதது. இப்போதைய நிலைமைப்படி பார்த்தால், இருதரப்பினரின் மனுவும் நிராகரிக்கப்படும். இருதரப்பினரும் பேசி முடிவெடுக்க வேண்டியதுதானே… எங்கள் யோசனையை ஏற்கவில்லையெனில் நாங்கள் உத்தரவு பிறப்பிக்கவேண்டிவரும். இருதரப்புக்கும் எந்த பாதிப்புமின்றி இந்த இடைத்தேர்தல் நடைபெறவேண்டும். இருதரப்பும் முரண்டு பிடிக்கிறார்கள். அதனால் சில தீர்வுகளை நாங்கள் கொடுக்க விரும்புகிறோம். உங்கள் பிரச்னைகளை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் எனச் சொல்லிவிட்டு எங்களால் போய்விடமுடியும்.

தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருப்பதால் நங்கள் முக்கிய உத்தரவு எதையும் பிறப்பிக்க விரும்பவில்லை. எனவே வேட்பாளர் தேர்வை அ.தி.மு.க பொதுக்குழு முடிவுசெய்யலாம். ஓ.பி.எஸ், பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் வேட்பாளர் தேர்வில் பங்கேற்கலாம். வேட்பாளர் தேர்வுசெய்யப்பட்ட முடிவு அவைத்தலைவரால் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்படவேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.