இரட்டை இலைக்கு உரிமை கோரி
எடப்பாடி பழனிசாமி
தாக்கல் செய்த இடையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
ஓ.பன்னீர் செல்வம் தரப்பும், தேர்தல் ஆணையமும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நிலையில் இரு தரப்பும் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் ஒதுக்க கோரி இதுவரை யாரும் எங்களை அணுகவில்லை. இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார் என்று தெரிவித்து விட்டது.
தேர்தல் ஆணையம் நேற்று பதில் மனு தாக்கல் செய்ததற்கும் அண்ணாமலையின் டெல்லி பயணத்திற்கும் சம்மந்தம் இருக்குமா என்று அரசியல் அரங்கில் கேள்விகள் எழுந்து வருகின்றன.
நேற்று முன் தினம் இரவு டெல்லி கிளம்பிச் சென்ற அண்ணாமலை நேற்றைய தினம் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்துப் பேசியுள்ளார். அந்த சந்திப்பின் போது எடப்பாடி பழனிசாமி தரப்பின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள் டெல்லி வட்டாரங்களில்.
ஓபிஎஸ்ஸுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பாஜக இனியும் செயல்பட்டால் உங்களை இழக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று எடப்பாடி பழனிசாமி சொல்வதாகவே கூட்டணி பெயர் மாற்றம் இருப்பதாக பாஜக தரப்பு கருதுகிறதாம்.
அதிமுக இரண்டல்ல, ஒன்று தான். அது எடப்பாடி பழனிசாமி தலைமையிலானது மட்டும் தான். வெளித்தோற்றத்துக்கு இருவரையும் இணைக்கிறோம் என்று கூறிவிட்டு, இரு பக்கமும் கொம்பு சீவி விட்டு பிரித்தாளும் கொள்கையை தொடர்ந்தால் கூட்டணியையே இரண்டாக உடைக்கிறோம் என்று தான் தேசிய ஜனநாயக கூட்டணியை, தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் மாற்றியுள்ளதாக சொல்கிறார்கள்.
இது பாஜக தலைமையையே கடுமையாக சீண்டும் விதமாக அமைந்துள்ளதாம். இதன் பின்னர் தான் தேர்தல் ஆணையத்தின் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி தனது எதிர்ப்பை பேனர் மூலம் இவ்வாறு காட்டிக் கொண்டாலும், தேர்தல் பணிமனை திறக்கும் அந்த நிகழ்வில் நேரடியாக கலந்து கொள்ளாமல் சேலத்தில் இருந்து கொண்டார். ஒருவேளை பாஜக தரப்பில் யாரும் நேரடியாகவே அதிருப்தி தெரிவித்தால் இது சாதாரண எழுத்துப் பிழை என சமாளிக்கவும் தயாராக இருந்ததாக சொல்கிறார்கள்.
அண்ணாமலை டெல்லியில் ஜே.பி நட்டாவை சந்திக்கும் சமயத்தில், பிரதமர் மோடியை முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பி துரை சந்தித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தரப்பின் நிலைப்பாட்டை விளக்கவே இந்த சந்திப்பு என கூறுகிறார்கள் டெல்லி சோர்ஸ்கள். ஆனால் பட்ஜெட் குறித்து பேசியதாக அதிமுக தரப்பில் கூறப்படுகிறது.
இன்று தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தனது விளக்கத்தை நேரடியாக கூறும் போது, அதைத் தொடர்ந்து தீர்ப்பு வெளியாகும் போது தான் எடப்பாடி பழனிசாமி தரப்பு தனது அடுத்த கட்ட நகர்வை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.