அதிகரிக்கும் குற்றச்செயல்கள்: சிம்கார்டுகளை கூவிகூவி விற்பதை தடுக்க கோரிக்கை

வேலூர்: தமிழகத்தில் நடைபாதை கடைகள் உள்பட பல இடங்களில் சிம்கார்டுகளை கூவிகூவி விற்பனை செய்யப்படுகிறது. இதுபோன்று விற்கப்படும் சிம்கார்டுகளை பெரும்பாலும் சமூகவிரோதிகள் வாங்கிச்சென்று குற்றச்செயல்களில் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு வரை ஒரு குற்றச்செயல் நடைபெறுகிறது என்றால், அது எதனால் நடைபெற்றது, எவ்வாறு நடைபெற்றது, குற்றவாளி யாராக இருக்கக்கூடும் என்பதை அறிந்து குறைந்தபட்சம் 2 நாட்களுக்குள் குற்றவாளிகளை போலீசார் பிடித்துவிடுவர். ஆனால் தற்போது குற்றச்செயல்களின் தன்மை மாறுபட்டுள்ளது.

இதனால் பல நேரங்களில் குற்றவாளிகளை எளிதில் கண்டறிந்து பிடிப்பது சவால் நிறைந்ததாக மாறிவிடுகிறது. தற்போது அதிகரித்து வரும் சைபர் குற்றங்களால் போலீசாரே சில இடங்களில் தடுமாறும் சூழலும் ஏற்படுகிறது. செல்போன் வந்த பிறகு குற்றம் நடந்த இடத்தில் பதிவான செல்போன் எண்களை வைத்து எளிதாக குற்றவாளிகளை போலீசார் பிடித்து வந்தனர். இதனை நன்கு உணர்ந்த குற்றவாளிகள் செல்போன் எண்களை தவிர்த்து வெளிநாட்டில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் செயல்களின் வாயிலாக பேசத் தொடங்கியுள்ளனர்.

இதனால், அவர்களை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. தொடர்ந்து குற்றவாளிகளின் செயல்பாடுகள் வாட்ஸ்அப் கால், பேஸ்புக் கால், இன்ஸ்டாகிராம் கால் உள்ளிட்டவற்றை தாண்டி தடை செய்யப்பட்ட செயலிகளை பதிவிறக்கம் செய்து அதன்மூலம் பேசுவது, செல்போன் எண்களுக்கு பதிலாக டாங்குள் எனப்படும் இணைய வழி சேவையை பயன்படுத்துவது உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்த தொடங்கி வருகின்றனர். இதன்மூலம் சாதாரண குற்றவாளிகளை பிடிப்பதற்கு கூட போலீசார் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  

தற்போது சமூகத்தில் நிலவும் அனைத்து குற்ற செயல்களுக்கும் செல்போன் மற்றும் இன்டர்நெட் ஒரு முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது. இதனால் செல்போன் நிறுவனங்கள் தெருக்களில் இன்டர்நெட் சேவை மற்றும் செல்போன் எண்களை கூவி கூவி விற்பதை வரைமுறைப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும், உண்மையான முகவரி கொடுத்து தான் செல்போன் எண்களையும் இன்டர்நெட் வசதியையும் பயனாளிகள் பெறுகிறார்களா? என்பதை ஒரு முறைக்கு இருமுறை உரிய ஆதாரத்துடன் ஆராய்ந்த பிறகு அவர்களுக்கு அதற்கான சேவையை வழங்கவேண்டும்.

இல்லையென்றால் வருங்காலங்களில் காவல் நிலையங்கள் எந்த அளவிற்கு உள்ளனவோ, அதே அளவிற்கு சைபர் கிரைம் காவல் நிலையங்களும் ஏற்படுத்த வேண்டிய நிலை வரும் என போலீசாரும் அச்சம் தெரிவிக்கின்றனர். குறிப்பிட்ட ஒரு நபர் வாட்ஸ்அப் கால் அல்லது தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்தும்போது, அவரை போலீசார் பின் தொடர்ந்து குறிப்பிட்ட நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்பி அவர்களை பின் தொடர குறைந்தபட்சம் 10 நாட்களாவது ஆகிறது. அதற்குள் அவர்கள் அந்த குறிப்பிட்ட டாங்குளை மாற்றி வேறு வைபையை பயன்படுத்துகின்றனர்.

இதனால், மீண்டும் அவர்களை பின் தொடர போலீசாருக்கு காலதாமதம் ஏற்படுகிறது. இதனால், தொடர்ந்து குற்றவாளியை பிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்படும் நிலையும் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.