“அந்தச் சிலையை வரவேற்பறையில் வெச்சிருக்கேன்!" – பாடகி வாணி ஜெயராமின் கடைசி காலகட்டம்

இந்தியத் திரையிசையின் ஒப்பற்ற குரல், இயற்கையுடன் தன்னைக் கரைத்துக் கொண்டது. நாடு முழுவதும் இசை ரசிகர்களைக் கொண்டிருந்த அபூர்வமான பாடகியான வாணி ஜெயராம், இசைத்துறைக்குக் கிடைத்த அரிதான பொக்கிஷம். அவரிடம் நெருங்கிப் பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும், குரலைப்போலவே, வாணியின் குணமும் எளிமையான பண்பும் அவ்வளவு இனிமையானவை என்று!

வாணி ஜெயராம்

தென்னிந்தியாவில் வாணியின் குரலையும் புகழையும் உச்சத்துக்குக் கொண்டு சென்றது, `தீர்க்க சுமங்கலி’ படத்தில் இடம்பெற்ற ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ பாடல். அவரின் வருகை, தமிழ் திரையிசைக்கு நல்லதொரு வரவு. `என்னுள்ளில் எங்கோ’, `இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே’, `நானே நானா’ என அவர் குரலில் நாம் மயங்கிப்போன பாடல்களின் எண்ணிக்கை இருபதாயிரங்களைத் தாண்டும்.

அபார இசை ஞானமும், பணிவான குணமும் இவரை நாடறிந்த இசைப் பிரபலமாக உயர்த்தியது. காய்த்த மரம்தான் கல்லடி படும் என்பார்கள். அதுபோல, இந்தி சினிமாவில் தவிர்க்க முடியாத பாடகியாக வளர ஆரம்பித்தபோதிலிருந்து, திரையிசையில் கோலோச்சியவரை…. வாணி எதிர்கொண்ட சவால்கள் ஏராளம் ஏராளம். ஆனால், எதற்காகவும் அவர் கலங்கியதுமில்லை; யார்மீதும் கோபம் கொண்டதுமில்லை. ஏனென்றால், அவர்தான் வாணி!

வாணி ஜெயராம்

அவள் விகடனின் 25-ம் ஆண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பிரபல இசைக்கலைஞர்கள் தங்கள் பர்சனல் பக்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் ‘சங்கீத சந்நிதி’ என்ற தொடர் வெளியாகி வருகிறது. அதில், முதல் பிரபலமாக, இசை ஆளுமை வாணியைப் பேட்டிக்குச் சம்மதிக்க வைத்தோம்.

உடல்நிலை மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியுலகத் தொடர்புகளிலிருந்து தன்னை வெகுவாக விலக்கிக் கொண்டிருந்த வாணி, அந்தப் பேட்டிக்காக இரண்டு மணி நேரத்துக்கு மேல் ஒதுக்கினார். தன் இசைப்பயணம், தனிப்பட்ட வாழ்க்கை என பல விஷயங்களையும் மனம்விட்டுப் பேசியவர், பாலிவுட்டில் எதிர்கொண்ட ஆரம்பகால புறக்கணிப்புகள் குறித்து, நீண்டகாலத்துக்குப் பிறகு, அப்போது மெளனம் கலைத்தார்.

“யார்மேலயும் எனக்கு வெறுப்போ, கோபமோ ஏற்பட்டதில்லை. எந்தப் பகையும் மனஸ்தாபமும் இழப்பும் நிரந்தரமே கிடையாதுனு உறுதியா நம்புறவ நான். அதுக்கு நல்ல உதாரணம், லதா மங்கேஷ்கர்ஜி என்மேல காட்டின அன்பு. ஒருமுறை அவங்க வீட்டுக்கு என்னைக் கூப்பிட்டு, எனக்குக் குங்குமம் வெச்சுவிட்டு, பிறந்தவீட்டு சீதனம்போல எனக்குப் புடவையுடன் மங்களகரமான சீர்வரிசைப் பொருள்களைக் கொடுத்தாங்க. என் குரலையும் குணத்தையும் மனதார வாழ்த்தினாங்க. இதேபோல ஆஷா போஸ்லேஜியுடன் தனிப்பட்ட பழக்கம் இல்லாட்டியும், அவங்க மேலயும் எனக்கு மதிப்பும் அன்பும் உண்டு!” என்று தன் உள்ளத்திலிருந்து வாணி சொன்னது, மிக முக்கியமான பதிவு.

‘கலைநாயகி’ விருது பெறும்போது…

இந்தப் பேட்டியைத் தொடர்ந்து, வாணி ஜெயராமுடன் தொடர்ந்து பேசுவதற்கான இனிமையான தருணங்கள் அவ்வப்போது கிடைத்தன. சமீபத்தில் நடந்து முடிந்த அவள் விகடன் விருதுகள் நிகழ்ச்சியில், வாணி ஜெயராமுக்கு `கலைநாயகி’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. மிகுந்த அன்புடன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர், குன்றக்குடி அடிகளாரிடமிருந்து விருதைப் பெற்றுக் கொண்டார். அந்த மகிழ்ச்சித் தருணத்தில், ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ பாடலைப் பாடியபோது, 45 ஆண்டுகளுக்கு முன்பு அவர் குரலில் ஒலித்த அதே இனிமை நம் செவிகளை வருடியது.

அவள் விகடன் விருதுகள் நிகழ்ச்சி முடிந்ததும், அடுத்த சில தினங்களில் வாணி ஜெயராமுக்கு பிறந்தநாள். அவருக்கு வாழ்த்து தெரிவிக்க, அவள் விகடன் குழுவினர் வாணியின் இல்லத்துக்குச் சென்றிருந்தோம். புன்னகையுடன் நம்மை வரவேற்று உபசரித்தவர், பத்திரிகை உலகத்தின் செயல்பாடு, பத்திரிகையாளர்களின் பணிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் ஆவலாகக் கேட்டறிந்தார். முருக பக்தையான வாணிக்கு, அவருக்குப் பிடித்த பாலமுருகன் சிலையைப் பரிசளித்தோம். அன்று மாலை, ‘முருகன் சிலை ரொம்ப பிரமாதம். என் வீட்டு வரவேற்பறையில அந்த சிலையை வெச்சிருக்கேன். என் பிறந்தநாளுக்குக் கிடைச்ச சிறப்பான பரிசு இது!” என்று தொலைபேசியில் உருகினார் வாணி.

வாணி ஜெயராம்

எத்தகைய மனவலிமை கொண்டோரையும் தனிப்பட்ட சில இழப்புகள் ரணமாக்கிவிடும். அதுபோல, கணவர் ஜெயராமின் இழப்பு, வாணியை ரொம்பவே பாதித்தது. வாணியின் நிழலாகவும் அரணாகவும் இருந்த அவரின் கணவர் ஜெயராம், 2018-ம் ஆண்டு காலமானார். அதன்பிறகு, அவசிய தேவை தவிர, பெரும்பாலும் வீட்டிலேயே தன்னைச் சுருக்கிக் கொண்டார். ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாகவும் மகிழ்ச்சியாகவும் அமைத்துக் கொண்டார்.

திரையிசையில் பொன்விழா கண்ட வாணி ஜெயராம், மூன்று முறை தேசிய விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றவர். இந்த நிலையில், குடியரசுத்தினத்தையொட்டி அவருக்கு பத்ம பூஷண் விருதை அறிவித்தது மத்திய அரசு. அந்த அறிவிப்பு வெளியான தருணம், காய்ச்சல் மற்றும் ஜலதோஷத்தால் பேசவே சிரமப்பட்டவராக இருந்தார் வாணி ஜெயராம். இருப்பினும், சிரமத்தையும் பொருட்படுத்தாமல், தொலைபேசி வாயிலாக ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரின் அன்புக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி கூறினார். அன்றைய தினம் அவருக்கு வாழ்த்துக்கூறிப் பேசியபோது, இந்தத் தகவலைத் தெரிவித்தவர், உடல்நிலை சரியானதும் அழைப்பதாகக் கூறியிருந்தார்.

வாணி ஜெயராம்

இப்போது அவர் இறப்பு குறித்து வந்துகொண்டிருக்கும் தகவல்கள், கலக்கத்துடன் அதிர்ச்சியைத் தருகின்றன. ‘உடல்நிலை சரியானதும் பேசுறேன்’ என்றவரின் குரலை, இனி பாடல்கள் வாயிலாக மட்டுமே கேட்க முடியும் என்பது மனதைக் கனக்கச் செய்கிறது. எல்லோருமே ஒன்றோ ஒருநாள் மரணிக்கத்தான் போகிறோம் என்றாலும், சிலரின் மறைவு மட்டும் நீங்காத சுவடாக மாறிவிடுகிறது. அந்த வகையில், வாணியின் இறப்பு, அவரின் ரசிகர்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரின் பாடல்களைக் கேட்கும்போதெல்லாம், வாணியின் முகமும் மென்சிரிப்பும் என்றென்றும் கண்முன் நிழலாடிக்கொண்டே இருக்கும்!

வாணி ஜெயராம் பாடிய ‘மேகமே… மேகமே…’ சூப்பர் ஹிட் பாடல் ஒரு வரி வரும்…

”எனக்கொரு மலர் மாலை நீ வாங்க வேண்டும்
அது எதற்கோ….”

அது இதற்குத்தானா வாணியம்மா….

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.