
பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம் தனது 78வது வயதில், இன்று சென்னை, நுங்கப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.

திரைத்துறையில் தனது இனிமையான குரல் மூலம் மக்களை தன்வசம் ஈர்த்த வாணி ஜெயராம், 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களில், 10,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
கடந்த குடியரசு தினவிழாவில் உயரிய விருதான பத்ம பூஷண் விருது இவருக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த நவம்பர் மாதம் நடந்த அவள் விகடன் விருதுகள் 2022 விழாவில், வாணி ஜெயராமிற்கு `கலை நாயகி விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சமீபத்தில் அவள் விகடன் இதழுக்கு வாணி ஜெயராம் அளித்திருந்த பேட்டியில் அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. அவரின் வார்த்தைகள் இங்கே…

“மகாத்மா காந்தி, பாரதியார், விவேகானந்தர்.’’
“வங்கிப் பணியாளரா வேலை செஞ்சு ஓய்வு பெற்றிருப்பேன்.’’

“13 வயசுல ஏ.ஆர்.ரஹ்மான் தனி இசைக்குழு தொடங்கினப்போ, அந்த நிகழ்வை குத்துவிளக்கேத்தி தொடங்கி வெச்சேன். இப்போ அந்தப் பிள்ளையோட வளர்ச்சியைப் பார்க்கிறப்போ பிரமிப்பாவும் பெருமிதமாவும் இருக்கு.’’

குரல்வள கவனத்துக்கு..?
“எண்ணெய், காரமான, குளிர்ச்சியான உணவுகளை அதிகம் எடுத்துக்க மாட்டேன். வயிறு நிறைய சாப்பிட மாட்டேன். அடிக்கடி இசைப் பயிற்சி எடுப்பேன்.’’
“என் நிஜப்பெயர் கலைவாணி. அதை ஒப்பிட்டு, `உங்களுக்குப் பெயர் பொருத்தம் பரிபூரணமா அமைஞ்சிருக்கு’னு கண்ணதாசன் சார் சொன்னது.”

‘’தீர்க்க சுமங்கலி’ படம் வெளியாகும் முன்பே, அதுல இடம்பெற்ற `மல்லிகை என் மன்னன் மயங்கும்’ பாடல் வெளியாகித் திரும்பின பக்கமெல்லாம் ஒலிச்சுக்கிட்டு இருந்துச்சு. இப்பாடல் இடம்பெற்ற `தீர்க்க சுமங்கலி’ படம் பார்க்க வாருங்கள்’னு விளம்பரம் செஞ்சாங்க. ஒரு பாடலை வெச்சு படத்துக்கு விளம்பரம் செய்றதெல்லாம், அந்தக் காலத்துல ரொம்பவே அபூர்வம்.’’

’’பின்னணிப் பாடகியான ஆரம்பத்துல ரெண்டு வருஷம் எனக்கு ரொம்பவே போராட்டமா இருந்துச்சு. சில எதிர்ப்புகள் இருக்கே, நல்ல நல்ல பாடல்கள் பாட வாய்ப்பு கிடைக்குமா?’ங்கிற கேள்வி அப்போ எனக்குள் இருந்துச்சு.’’
“இசைத்துறையில எனக்கும் நிலையான இடம் கிடைக்கும்ங்கிற நம்பிக்கையுடன் ஒவ்வோர் அடியையும் நிதானமா எடுத்து வெச்சேன். என் எதிர்பார்ப்பு நிறைவேறுச்சு! இசையமைப்பாளர்கள் என்மேல நம்பிக்கை வெச்சு கொடுத்த ஒவ்வொரு வாய்ப்புக்கும் நியாயம் சேர்த்திருக்கிறதா நம்புறேன்.’’
’’என் அனுபவத்துல சொல்றேன். நமக்கான நேரம் வரும்வரை, நம் இலக்கு நிறைவேறும்வரை, ஒருபோதும் பொறுமையையும் உழைப்பையும் கைவிடவே கூடாது.’’

‘’நாம நினைக்கிற மாதிரியே வாழ்க்கை அமைஞ்சா நல்லதுதான். ஒருவேளை நாம எதிர்பார்த்தது நடக்கலைன்னா, நடப்பது எதுவானாலும் அதை நமக்கானதா ஏத்துக்கணும்.’’

’’வாழ்க்கையே சுழல்ற சக்கரம் மாதிரிதான். இதுல ஏற்ற இறக்கம் இயல்பானது. இதை வாழ்நாள் முழுக்க நினைவுல வெச்சுக்கிறது நல்லது. மத்தவங்களுக்காக வாழணுமே தவிர, மத்தவங்களை அழிச்சு மேல வர நினைக்கக் கூடாது.’’