சென்னை: `விமான நிலையம் அமைப்பதுதான் எங்கள் பணி; நிலம் மாநில அரசின் பொறுப்பு’ – ஜோதிராதித்ய சிந்தியா

சென்னை, பரந்தூரில், இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கு ஒருபக்கம் எதிர்ப்புகள் எழுந்துகொண்டேயிருக்க, மறுபக்கம் அதனை அமைப்பதற்கான வேலைகளும் நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் குறித்த விளக்கக் கூட்டம், சென்னையிலுள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கலந்துகொண்டார்.

ஜோதிராதித்ய சிந்தியா

செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிராதித்ய சிந்தியா, “நிதிநிலை அறிக்கை குறித்து இரண்டு வார்த்தைகள் கூற விரும்புகிறேன். கொரோனா தாக்கத்துக்குப் பிறகு உலகம் தற்போது தான் வளர்ந்து வருகிறது. உலக அளவில் நிலவும் பிரச்னைகளுக்கு இடையில் இந்தியா தனக்கான பாதையை வகுத்துள்ளது. உலகளவில் 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்திய வளர்ச்சியடைந்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியா மிகச் சிறப்பாக வளர்ச்சியடைந்துவருகிறது.

தற்போது சவால்களில் இருக்கும் வாய்ப்புகளைப் பார்க்கிறது இந்தியா. வளர்ச்சியைக் குறிவைத்து, இந்தியாவை உலக நாடுகளுக்கு தலைவராக்கப் பயணிக்கிறோம். மகளிர் மற்றும் பாதுகாப்புக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 3-வது ஆண்டாக அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும்போது, மாநிலத்துக்கும், நாட்டுக்கும் GDP வளர்ச்சி அதிகரிக்கும்.

2023-2024 பட்ஜெட்

காங்கிரஸின் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 16 ஆயிரம் கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் பா.ஜ.க ஆட்சியில் இதுவரை 15 லட்சத்து 60 ஆயிரம் கோடி சாலை மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்தியா சுதந்திரமடைந்து 67 ஆண்டுகளில் 74 விமான நிலையங்கள் தான் கட்டப்பட்டது. ஆனால் பா.ஜ.க ஆட்சியில் 8 ஆண்டுகளில் 73 புதிய விமான நிலையங்கள் மற்றும் ஹெலிபேட்கள் கட்டப்பட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் 150 விமான நிலையங்கள் மற்றும் ஹெலிபெட்கள் கட்டப்படவுள்ளது. இதுபோன்ற கட்டமைப்புகள் தான் இந்தியாவை உலக நாடுகளுக்கு தலைமைதாங்கச் செய்யும். இது அனைவருக்குமான நிதிநிலை அறிக்கை. 2030-ல் இந்தியா 3-வது பெரிய பொருளாதார நாடாக உயர இந்த நிதிநிலை அறிக்கை உதவும். சிறு குறு தொழில்களில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.

பரந்தூர் விமான நிலைய திட்டம்

தற்போது சென்னை விமான நிலையத்தில் அனைத்து விதமான வசதிகளும் அதிகளவில் தரமானதாக உள்ளது. பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் உறுதியாக அமைக்கப்படும். அதற்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அனைத்தும் மாநில அரசு தான் செய்ய வேண்டும். எங்கள் பணி விமான நிலையம் அமைப்பது மட்டுமே. அதற்கான பணிகள் நாங்கள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் வாட் வரி அதிகமாக இருக்கிறது. அதனைக் குறைக்க வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.