சென்னை: தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிருவாகத்திலுள்ள 88 திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக ரூ.3 கோடி அரசு மானியத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்.4) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிருவாகத்திலுள்ள 88 திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக அரசு மானியமாக 3 கோடி ரூபாய்க்கான காசோலையை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜி ராஜா பான்ஸ்லேவிடம் வழங்கினார்.
2022 – 2023 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கையில், “தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிருவாகத்தில் உள்ள 88 திருக்கோயில்களில் பெரும்பாலானவற்றில் போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையில் 3 கோடி ரூபாய் அரசு மானியம் ஆண்டுதோறும் வழங்கப்படும்” என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த மானியம் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தில் 88 ஒருங்கிணைந்த திருக்கோயில்களின் நிருவாகமானது பரம்பரை அறங்காவலர், உதவி ஆணையர்/ பொருளாளர் மற்றும் மேலாளரால் நிருவகிக்கப்பட்டு வருகிறது. தேவஸ்தானத்துடன் இணைந்துள்ள 88 திருக்கோயில்களில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பால் (UNESCO) உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட தஞ்சாவூர், அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில், தாராசுரம், அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில், முக்கிய பிரார்த்தனை தலமாக விளங்கும் புன்னைநல்லூர், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் மற்றும் வைணவ 108 திவ்ய தேசங்களில் ஒன்றான தஞ்சை மாமணிகோயில் எனப்படும் வெண்ணாற்றங்கரை, அருள்மிகு மேலசிங்க பெருமாள் திருக்கோயில், அருள்மிகு மணிகுன்ற பெருமாள் திருக்கோயில் மற்றும் அருள்மிகு நீலமேகப் பெருமாள் திருக்கோயில் ஆகிய முக்கிய திருக்கோயில்கள் உள்ளன.
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்குட்பட்ட திருக்கோயில்களில் பெரும்பாலும் குறைந்த வருவாய் மட்டுமே கிடைக்கப் பெறுகிறது. முதன்மையாக வருவாய் வரப்பெறும் தஞ்சாவூர், அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில் மற்றும் புன்னைநல்லூர், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்களின் வருவாயை கொண்டே இதர திருக்கோயில்களின் நிர்வாகம் நிதி பற்றாக்குறையுடன் தற்போது மேலாண்மை செய்யப்பட்டு வருகிறது. இந்நிதி பற்றாக்குறையை போக்கிடும் வகையில் அரசு மானியமாக ஆண்டுதோறும் 3 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.
தமிழக முதல்வர் கடந்த 27.12.2021 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்கான அரசு மானியத்தை 3 கோடி ரூபாயிலிருந்து 6 கோடி ரூபாயாகவும், புதுக்கோட்டை தேவஸ்தான திருக்கோயில்களின் நிர்வாக மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கான அரசு மானியத்தை 1 கோடி ரூபாயிலிருந்து 3 கோடி ரூபாயாகவும் உயர்த்தி அதற்கான காசோலைகளை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்தர மோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள் இரா.கண்ணன், ந.திருமகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம்: பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிலாளர் நல வாரிய பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தி தொழிலில் ஈடுபடும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நல வாரியத்தின் மூலமாக கல்வி, திருமணம், மகப்பேறு, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு அரசு வழங்கி வருகின்றது. அத்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நல வாரியத்திற்கு விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் 5 கோடி ரூபாய் பங்களிப்பு நிதியினை தமிழக முதல்வரிடம் வழங்கினர்.
இலக்கிய மலர் 2023 வெளியீடு: தமிழக முதல்வர் இன்று (பிப்.4) தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தமிழரசு இதழின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “இலக்கிய மலர் 2023” என்ற சிறப்பு மலரினை வெளியிட, அதன் முதல் பிரதியை தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பும், இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரதிகளை சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் புகழ்பெற்ற ஓவியர் டிராட்ஸ்கி மருது ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இளைய தலைமுறையினருக்கு இலக்கிய ஆர்வத்தை ஊட்டும் விதமாக இம்மலரில் நூற்றுக்கணக்கான படைப்பாளர்கள், அரசியல் சிந்தனையாளர்கள், வரலாற்று அறிஞர்கள், மானுடவியல் ஆய்வாளர்கள் தங்களின் பங்களிப்பை அளித்துள்ளார்கள். மேலும், அறிஞர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், விமர்சகர்கள், ஓவியர்கள் போன்றவர்களின் எழுத்தும், இலக்கியமும், அவர்களின் ஓவியங்களும், கவிதைகளும், கட்டுரைகளும், சிறுகதைகளும் இன்றைய இலக்கிய உலகத்தில் எங்ஙனம் படைக்கப்பட்டிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் நோக்கில் “இலக்கிய மலர் 2023” உருவாக்கப்பட்டுள்ளது.