புதுச்சேரி: தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவுசெய்த நிலையில், மாநில அரசும் இசைவு தெரிவித்தது. இதை நடைமுறைக்கு கொண்டு வரும் வகையில் டெண்டரும் விடப்பட்டது. இதற்கிடையே இந்த நடவடிக்கையை கண்டித்து மின்துறை ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் முதல்வர் ரங்கசாமி தலைமையிட்டு, போராட்டத்தை தற்காலிகமாக கைவிட செய்தார். இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் மின்நுகர்வோர்களுக்கு பிரிபெய்டு மின்மீட்டர் பொருத்தும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான அறிவிப்பையும் அரசு வெளியிட்டு உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.251.10 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதுவும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இச்சூழ்நிலையில் தமிழகத்தைபோல் புதுச்சேரியிலும் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி அரசின் சார்பு செயலர் முருகேசன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: அரசின் அனைத்து சலுகைகள், சேவைகள் பெற ஆதார் அட்டை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது அரசின் அனைத்து சேவைகளையும் பெற எளிதாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் உள்ளது. இதன் மூலம் பயனாளிகள் தங்கள் உரிமைகளை நேரடியாக பெற முடிகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இத்துடன் வங்கி அல்லது தபால் வங்கி புத்தகம், பான் கார்டு, பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, தேசிய ஊரக வேலைவாய்ப்பு அடையாள அட்டை , உழவர் அட்டை, ஓட்டுனர் உரிமம், அரசிதழ் அதிகாரி வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, அரசு துறைகளால் அங்கீகரிக்கப்பட்ட அட்டை ஏதேனும் ஒரு ஆவணத்தை இணைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 3 லட்சத்து 50 ஆயிரம் வீட்டு மின் இணைப்புகளும், 56 ஆயிரத்து 500 வர்த்தக பயன்பாடு இணைப்புகளும் உள்ளன. இது தவிர ஒரு விளக்கு திட்டத்தின் கீழ் 35 ஆயிரம் இணைப்புகள் உள்ளன. மேலும் 6 ஆயிரத்து 782 குறைந்த மின் அழுத்த தொழிற்சாலைகளும், 530 உயர்மின்னழுத்த தொழிற்சாலைகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.