பேராசிரியர் வெங்கி ராமகிருஷ்ணன் 2009 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை பெற்றவர். இவர் எழுதிய ‘ஜீன் மெஷின் : ரோபோசோம் ரகசியங்களும் கண்டுபிடிப்பில் போட்டிகளும்’ என்னும் நூலை தமிழில் சற்குணம் ஸ்டீவன் மொழியாக்கம் செய்துள்ளார். காலச்சுவடு பதிப்பித்த இந்நூலை நேற்று (03.02.2023) சென்னை தரமணி ஏஷியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் கல்லூரி வளாகத்தில் ‘இந்து’ என்.ராம் வெளியிட, ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் அரசியல் பிரிவு இதழாளர் ப.கோலப்பன் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் ‘ஜீன் மெஷின்’ நூலை மதிப்பீடு செய்து பேசிய எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான ஜி.குப்புசாமி, “ஆரம்பக் கல்வியை மட்டுமே முடித்திருப்பவருக்கு எளிதாக புரியும்படியான தமிழாக்கம்” என்று கூறினார்.
பின்பு, நூலாசிரியரான வெங்கி ராமகிருஷ்ணன் ஏற்புரையும் காலச்சுவடு பதிப்பகம் கண்ணன் நன்றியுரையும் ஆற்றினார்கள். மேலும், இந்நிகழ்ச்சியில் இலக்கிய ஆர்வலர்கள், வாசகர்கள், ஊடகவியலாளர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியை ஏஷியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசமும் காலச்சுவடு பதிப்பகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.