நீரிழிவு நோயாளிகளுக்கு பலாபிஞ்சு சிறந்த மருந்தாகிறது. தமிழக விவசாயிகள் தற்போது பலா சாகுபடியில் பரவலாக ஆர்வம் காட்டுகின்றனர். ஏனெனில் பலாவானது வடிகால் வசதியுள்ள புஞ்சை நிலங்களில் குறைந்த பராமரிப்பில் வளர்ந்து பல லட்சங்கள் வருமானத்தை தரக் கூடியது. பலா பிஞ்சு காய், பழம் ஆகியவற்றில் நூறு வகையான பண்டங்கள் செய்யலாம். அவற்றுள் பச்சை பலாக்கறி பல காய்கறிகளுக்கு மாற்றாக பயன்படுகிறது. மேலும் உலக அளவில் பேசப்படும் பத்துக்கும் மேற்பட்ட சிறந்த உணவுப் பொருட்களில் பலாவும் சிறந்த ஆரோக்கியம் தரும் உணவாக உள்ளது.

சரிவிகித உணவு…
ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, சப்போட்டா, திராட்சை போன்ற பழங்கள் முற்றி பழுத்த பின்னரே உண்ணலாம். ஆனால், பலாவினை ஆறுநாள் பிஞ்சிலிருந்து, நூறு நாளுக்கு மேல் எந்த நிலையிலும் உணவாக சமைத்து கூட்டாகவும், முழு உணவாகவும் உண்ணத் தகுந்தது. முற்றிய பலா பழுத்த பின் பலாச்சுளையாக உண்ணலாம். இளம் பிஞ்சுப்பலா காளானுக்கு ஈடான சுவை தரும். பிஞ்சு, பச்சைப்பலா, முக்கால் முற்றியது. களை, கொட்டை, பழம் எந்த நிலையிலும் எல்லா பாகங்களும் சுவையான சரிவிகித உணவாகும் என்ற பெருமை பாலாவிற்கு மட்டுமே உண்டு.
பச்சைப் பலா
அசைவ உணவுகளுக்கு சிறந்த மாற்று பலாப்பிஞ்சு, பச்சைப்பலா இளம் பிஞ்சிலிருந்து பொறியல் அவியல், குருமா, ஊறுகாய் செய்யலாம். “பச்சைப்பலா” என்பது முதல் 40 நாட்களுக்குட்பட்டதாகவும், இரண்டு கிலோவிறகு குறைவான எடையுள்ளதாகவும் இருக்கவேண்டும் பச்சைப்பலாவிலிருந்து சாம்பார் கொத்துக்கறி, அவியல்,பக்கோடா,பிரியாணி, மஞ்சூரியன், கட்லட், பொறியல், கலவைக்கறி மிகுந்த உணவுபண்டங்களை செய்யலாம்.
இலங்கை, பிலிப்பைன்ஸ்,இந்தோனேசியா போன்ற பல வெளிநாடுகளிலும், கேரளா,கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும், உணவகங்களில் பலாக்கறி உணவுகள் மிகவும் பிரபலமானது. பச்சை பலாவானது இறைச்சி உணவுகளுக்கு மிகச்சிறந்த மாற்றாக தற்போது கொண்டாடப்படுகிறது.

மிகச்சிறந்த அங்கக உணவு
இந்தியர்களின் உணவுப்பழக்கத்தில் உள்ள பால், பானங்கள், நொறுக்கு பண்டங்கள், காய்கறிகள், பழங்கள், பிற உணவுகள் எல்லாவற்றிலும் ஒரு நபருக்கு ஒரு நாளில் உடலில் சேரும் நச்சுகளின் அளவு 100 மில்லி கிராமுக்கு மேலாக உள்ளதென கண்டறியப்பட்டுள்ளது. பலா இயற்கை வழி வேளாண்மை மூலம் எளிதாக பயிரிடப்படுகிறது. பலாபிஞ்சு, பச்சைப்பலாவினை காய்கறியாக உணவில் சேர்த்துகொண்டால், நஞ்சில்லா அங்கக உணவாகி பலவித நோய்களுக்கும் உணவே மருந்தாகி ஆயுளை கூட்டும்.
பலா உணவுகள்…
இன்றைய காலகட்டத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு சவால் விடும் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமனாதல், மலச்சிக்கல், போன்ற உடல் உபாதைகளுக்கு உணவே மருந்தாகி, ஆயுளை கூட்டுவதாகவும், பலா உணவுகள் உள்ளது. பலாப்பிஞ்சு, பச்சைப் பலாக்கறிதுண்டு. முற்றாத பலாச்சுளை, பலாக்கொட்டை ஆகியவை பச்சையாகவும் உலர்ந்த நிலையிலும் மதிப்புக் கூட்டி நூற்றுக்கணக்கான உணவுத் தயாரிப்புகள் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாக உள்ளது.

உணவிலுள்ள உயிர் சத்துக்கள், பயிர்ச்சத்துக்கள், தாதுபொருட்கள், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை மனித உடலில் உண்டாகும் கொடிய நோய்களுக்கும் உணவே மருந்தாகி நோய் வராமல் பாதுகாக்கும்.
பிஞ்சு மற்றும் பச்சைப்பலாவில் உள்ள மாவுசத்தானது அரிசியில் உள்ளதைப்போல நான்கில் ஒருபங்காக உள்ளது. அதாவது 348 சதவிதமாக உள்ளது. இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உப உணவாகிறது. இதிலுள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை குறைத்து நோய் வராமல் தடுக்கிறது. இரும்புச்சத்து உள்ளதால் இரத்த சோகை வராமல் தடுப்பதுடன் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. வைட்டமின் சத்துக்கள் பாக்டீரியா மற்றும் வைரஸ்-நச்சுயிரி நோய்களிலிருந்து பாதுகாப்பதுடன் கண்ணுக்கும், சரும நோய்கள் வராமல் தடுக்கும். பலாவிலுள்ள பயிர்சத்துக்கள் (Phyturmittimes) கொடிய புற்றுநோய் உண்டாவதை தடுக்கும். புற்றுநோய் சிகிச்சைக்கு பின் ஏற்படும் பின் விளைவுகளை தணிக்கிறது.
நார்ச்சத்து மிகுந்த ஒருசில காய்கறிகளில் பலாவும் ஒன்று. இது மலச்சிக்கல், வயிற்றுப்புண் போன்ற குடல் நோய்கள் வராமல் தடுக்கிறது.
பலாப்பிஞ்சு..!
பலா வகைகளை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உணவாக உண்ணும்போது ஒட்டு மொத்த உடல் உறுப்புகளின் ஆரோக்கியம் காப்பதுடன், ஆயுளை கூட்டவும், நூறு ஆண்டுகள் வாழ்வும் வழி வகுக்கும்.

ஜனவரி முதல் மார்ச் வரை பலா பிஞ்சு காய்களுடன் காய்த்துக் குலுங்கும். ஒரு மரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பிஞ்சுகள் விடும். பலா விவசாயிகளுக்கு ஒரு காம்பிற்கு ஒரு பிஞ்சை மட்டும் வைத்துவிட்டு, அதைச் சுற்றி கொத்து கொத்தாக உள்ள பிஞ்சுகளை வெட்டி அகற்றிவிடுவார்கள். தரமான பழம் நன்றாக விளையவேண்டும் என்பதற்காக செய்யும் முக்கிய பணிஇது. இதனை பிஞ்சு கழித்தல் (THIINNING)’ என்று கூறுவார்கள்.
பிஞ்சு பறிக்கும்போது ஒரு மரத்தில் ஒரு நேரத்தில் முப்பதுக்கு மேற்பட்ட பிஞ்சுகளை அகற்றுவார்கள். சிலர் சந்தைபடுத்தாமல் மரத்தடியிலே அப்படியே போட்டு விடுவார்கள். சிலர் சிறு சிறு துண்டுகளாக வெட்டி உப்புடன் கலந்து கால்நடைகளுக்கு தீவனமாக கொடுப்பதுண்டு. இவ்வாறு வீணாகும் பலாப் பிஞ்சினை மதிப்பு கூட்டினால் சிறந்த நஞ்சில்லா காய்கறி உணவாகும். வேலைவாய்ப்பும் பணமும் தரும் பலாப் பிஞ்சினை மதிப்புக்கூட்டி பலன் பெறலாம்.
செய்முறை 1: பச்சை பலாக்கறிதுண்டுகள் ஒரு கிலோ பலாப் பிஞ்சினை (அ) பச்சை பலாவினை இரண்டாக, நாலாக, எட்டாக பின் பதினாறு துண்டுகளாக வெட்டவும், பச்சையான முன் பகுதி மற்றும் நடுத்தண்டு பகுதியினையும் சீவி அகற்றவும். பின் 1 அங்குல கனமுள்ள சதுர துண்டுகளாக நறுக்கவேண்டும் இதனை பாலிதீன் பைகளில் அடைத்து பச்சை காய்கறி துண்டுகளாக HTC-Ready To Cook) கிலோ ரூ 100/ க்கு மேல் உழவர் சந்தை மற்றும் காய்கறி கடைகளில் விற்பனை செய்யலாம்.

கட்டுரையாளர் : A.P.ஹரிதாஸ்
செய்முறை 2: உப்பநீரில் பலாக்கறி நறுக்கிய துண்டுகளை 10 சதவிகித உப்புக் கரைசலில் ( ஒரு லிட்டருக்கு 100 கிராம் என்ற விகிதத்தில்) காற்று புகாத பாத்திரங்களில் அடைத்து 3 மாதங்கள் வரை சேமிக்கலாம். உப்பு நீரில் ஊறிய பலாக்கறி துண்டுகளை கால் கிலோ, அரை கிலோவாக பாலித்தீன் பைகள் அல்லது டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்யாலாம் சமைப்பதற்கு முன் நல்ல நீரில் வைத்து அலசிய பின் சுவையான பிரியாணி, பொரியல் செய்யலாம்.
செய்யவேண்டியது என்ன ?
இதுவரை பலாக்கறி உண்ணாதவர்களுக்கு இதனை உண்டு சுவைக்கவேண்டும். நோயாளிகள் பச்சைப் பலாக்கறி உணவுகளை வாரம் ஒருநாள் உண்ணும் நிலை வரவேண்டும். குடும்ப விழாக்கள் பிறந்தநாள் விழா, சடங்குகள், திருமண விழாக்களில் பலாபொறியல், கூட்டு, பிரியாணி, மஞ்சூரியன் போன்ற பலா உணவுகள்- கட்டாயம் இடம்பெறுவதை பெருமையாக கருத வேண்டும். பலா இல்லாமல் குடும்ப விழாக்கள் இல்லை” என்ற மனநிலை உருவாகவேண்டும்.

வேலையில்லாத பட்டதாரிகள் வீணாகும் பலாப்பிஞ்சினை குறைந்த விலையில் சேகரித்து மதிப்பு கூட்டி பணமாக்கி தனது மதிப்பினை கூட்டலாம்.
சுமார் 1 லட்சம் ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்கி பல லட்சங்களை லாபமாக ஈட்டலாம், தொழிலதிபராகலாம் பாலாவுடன் வாழ்வோம் நஞ்சில்லா நலமுடன் வாழ்வோம், வளமுடன் வாழ்வோம். பலாவை உண்போம்.
கட்டுரையாளர்:
– A.P.ஹரிதாஸ்
முன்னோடி பலா விவசாயி மற்றும் வேளாண்மை துறை முன்னாள் உதவி இயக்குநர், பண்ருட்டி, கடலூர் மாவட்டம்.