புதுடெல்லி: சென்னையை தளமாகக் கொண்ட குளோபல் பார்மா ஹெல்த் கேர் நிறுவனத்தின் கண் சொட்டு மருந்தினை பயன்படுத்திய பலர் பாதகமான விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பு எச்சரித்திருந்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க சந்தைகளில் இருந்து தனது மருந்துகளை குளோபல் பார்மா ஹெல்த்கேர் நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது.
அமெரிக்க அரசின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பு, எஸ்ரிகேர், (EzriCare),எல்எல்சி, டெல்சாம் பார்மா போன்ற நிறுவனங்களால் விநியோகிக்கப்படும் செயற்கை கண்ணீர் லூப்ரிகண்ட் சொட்டுமருந்துகளால் ஏற்பட்ட பக்க விளைவுகள் பற்றி விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில் அது, அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்துறைக்கு சமீபத்தில் எச்சரிக்கை ஒன்றை அனுப்பியிருந்தது. அதில், கண் பாதிப்பு, நிரந்தர பார்வை இழப்பு, ரத்தத்தில் ஏற்பட்ட தொற்று காரணமாக மரணம் என 55 பாதகமான விளைவுகளால் இதுவரை பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட எச்சரிக்கையில், அந்தநிறுவனங்களின் மருந்துகளை பயன்படுத்துவதை, வாங்குவதை பொதுமக்களும், மருத்துவர்களும் நிறுத்தவேண்டும். அசுத்தமான செயற்கையாக கண்ணீரை வரவழைக்கும் சொட்டுமருந்தை பயன்படுத்துவது கண்பாதிப்புகளை ஏற்படுத்தி பார்வையிழப்பு மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கிறது. என்று தெரிவித்திருந்தது.
மேலும், போதுமான நுண்ணுயிர் சோதனைகளை மேற்கொள்ளாமை, மருந்துகளை பேக் செய்யும் போது போதுமான கவனமின்மை போன்ற குற்றச்சாட்டுகளுக்காக அந்த மருந்துகளை சந்தையில் இருந்து திரும்பப் பெறச்சொல்லி பரிந்துரைத்துள்ளது. அந்த நிறுவனம் அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்துறையின், பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதனால் அந்த நிறுவனத்தின் பொருட்கள் அமெரிக்க சந்தையில் நுழைவது தடுக்கப்படும்.
இதுகுறித்து சிப்லா நிறுவனத்தின் முன்னாள் சர்வதேச ஆலோசகர், முரளி நீலகண்டன் கூறுகையில்,” கண் மருந்துகள் அல்லது IV சொட்டுமருந்துகளில் உள்ள சவாலே அவைகள் உடலுக்குள் வேலை செய்கின்றன. மேலும் அவை மிகவும் பாதுகாப்பான சூழலில் உற்பத்தி செய்யப்பட்டு, பேக் செய்யப்பட்டு அனுப்பப்பட வேண்டும். இதுபோன்றதொரு வழக்கில், இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்ட ஒரு நிறுவனத்தின் கண் மருந்துகள் சென்ற கண்டெயினர் அசுத்தமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் அந்த கண்டெயினர் இங்கிலாந்துக்குள் அனுப்பப்படவில்லை. அந்த கண்மருந்துகள் முறையாக பேக் செய்யப்பட்டிருந்தது. அதில் அசுத்தம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறி அவை அழிக்கப்பட்டன.
கண்சொட்டுமருந்துகள் தயாரிப்பில் ஒவ்வொரு நிலையிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மருந்து உற்பத்தி மற்றும் விநியோகக சங்கிலி வரை மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும் “என்றார்.