வளர்ப்பு யானைகளை பராமரிக்கும் பயிற்சி பெற தெப்பக்காடு முகாம் பாகன்கள் 8 பேர் தாய்லாந்து பயணம்

ஊட்டி,: வளர்ப்பு யானைகளை பராமரிப்பது குறித்து பயிற்சி பெற தெப்பக்காடு முகாமில் இருந்து 8 பாகன்கள் தாய்லாந்து புறப்பட்டு சென்றனர். நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. இக்காப்பத்தில் நூற்றாண்டு புகழ்பெற்ற தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. வனங்களில் தாயை பிாிந்த யானை குட்டிகள், மனிதர்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் தொந்தரவு செய்யும் யானைகள் பிடித்து வரப்பட்டு இங்கு வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது, தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் 2 குட்டி உட்பட 20க்கும் மேற்பட்ட வளர்ப்பு யானைகள் உள்ளன.

இதில் விஜய், வாசிம், முதுமலை உள்ளிட்ட 5 யானைகள் கும்கி யானைகளாக உள்ளன. இவை வனப்பகுதிகளுக்குள் ரோந்து பணிகள், குடியிருப்பு பகுதிகள், விளை நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டும் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றன. இந்நிலையில், வளர்ப்பு யானைகளை பராமரிக்கும் பணிகளில் முதுமலை சுற்று வட்டார பகுதிகளில் பூர்வீகமாக வசித்து வரும் பழங்குடியினத்தை சேர்ந்த பாகன்கள், காவடிகள் (பாகன் உதவியாளர்கள்) உள்ளனர். வளர்ப்பு யானைகளை பராமரிக்கும் பாகன்கள் மற்றும் காவடிகளுக்கு தாய்லாந்தில் பயிற்சி அளிக்க தமிழக வனத்துறை முடிவு செய்தது.

இதனை தொடர்ந்து, உதயன் யானை பாகன் சுரேஷ், முதுமலை யானை பாகன் டிஎம் பொம்மன், ஜம்பு யானை பாகன் சிஎம் பொம்மன், அண்ணா யானையின் காவடி குள்ளன், சங்கர் -2 யானை காவடி கேத்தன், கிருஷ்ணா யானை காவடி சிவன், ரகு யானை காவடி காளன் ஆகிய 7 பேர், வன கால்நடை ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு தாய்லாந்தில் உள்ள யானைகள் காப்பகத்தில் வைத்து வளர்ப்பு யானைகளை பராமரிக்கும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி இன்று (4ம் தேதி) துவங்கி 11ம் தேதி வரை நடக்கிறது.

இதற்காக, இவர்கள் 8 பேரும் நேற்று சென்னை புறப்பட்டு சென்றனர். அவர்களை முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் வித்யா மற்றும் வனத்துறை அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். தொடர்ந்து இன்று அதிகாலை விமானம் மூலம் தாய்லாந்து சென்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.