புதுடெல்லி: “எல்ஐசி மற்றும் எஸ்பிஐ அவற்றின் வரம்புக்கு உட்பட்டே அதானி குழுமத்தில் முதலீடும் கடனும் வழங்கியுள்ளன” என்று நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது ஹிண்டன்பர்க் – அதானி முறைகேடு விவகாரம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் முதல்முறையாக தெரிவித்துள்ள கருத்தாகும்.
முன்னதாக, எல்ஐசி நிர்வாக இயக்குநர் சித்தார்த்த மொகந்தி கூறும்போது, “அதானி குழுமத்தில் உள்ள எங்கள் முதலீடு வரம்புக்கு உட்பட்டது” என்று தெரிவித்திருந்தார். அதேபோல், எஸ்பிஐ தலைவர் தினேஷ் குமார் காரா கூறும்போது, “நாங்கள் அதானி குழுமத்துக்கு ரூ.21,000 கோடி கடன் வழங்கியுள்ளோம். இது எஸ்பிஐயின் மொத்தக் கடனில் 0.9 சதவீதம்தான். கடன் திருப்பிச் செலுத்தப்படுவது தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே, இது குறித்து கவலை தேவையில்லை” என்று தெரிவித்தார்.
இந்த இரண்டு நிறுவனங்கள் விளக்கம் அளித்ததை அடுத்து, இந்த விவகாரத்தில் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்துள்ளார். “எல்ஐசியும் எஸ்பிஐயும் தங்கள் வரம்புக்கு உட்பட்டே அதானி குழுமத்துக்கு முதலீடும் கடனும் வழங்கியுள்ளதாக கூறுகின்றன. அவற்றின் பங்கு மதிப்பு சரிந்துள்ள போதிலும், அவை இன்னும் லாபம் ஈட்டக்கூடியவையாக இருக்கின்றன என்று அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன” என்று அவர் கூறினார்.
அதானி பங்கு சரிவால் எல்ஐசி மற்றும் எஸ்பிஐ பாதிக்கப்படுமா என்று மத்திய நிதிச் செயலாளர் டி.வி சோமநாதனிடம் கேட்கப்பட்டபோது, “அதானி குழும நிறுவனங்களில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி அல்லது இன்சூரன்ஸ் நிறுவனம் முதலீடு செய்வது முதலீட்டாளர்களுக்கு, பாலிசிதாரர்களுக்கு கவலையளிக்கக் கூடிய விஷயம் இல்லை.அந்த வகையில் எஸ்பிஐ மற்றும் எல்ஐசி ஆகியவை எந்த நிறுவனத்தில் முதலீடு செய்தாலும், அதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை” என தெரிவித்தார்.
எல்ஐசியும் எஸ்பிஐயும் தங்கள் வரம்புக்கு உட்பட்டே அதானி குழுமத்துக்கு முதலீடும் கடனும் வழங்கியுள்ளதாக கூறுகின்றன.