கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன். இவர் தன் மகளுக்கு அரசு வேலை தேடிக்கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காந்திராஜ் மகன் சரவணக்குமார் என்பவர் அறிமுகமாகியிருக்கிறார்.

சரவணக்குமார், “நான் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறேன். இந்து சமய அறநிலையத்துறையில் அரசு வேலை வாங்கித் தருகிறேன்” என ஆசைவார்த்தைக் கூறியிருக்கிறார்.
தன் கூட்டாளிகளான ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஜவகர் பிரசாத் (29), தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அன்பு பிரசாத் (39), தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சரவணக்குமார் (33), கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (33),

பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சுரேந்திரன் (34), சுதாகர் (37) ஆகிய நபர்களுடன் இணைந்து வசூல் வேட்டை நடத்தியிருக்கிறார். சந்தானகிருஷ்ணனிடமிருந்து மட்டும் ரூ.21 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, போலி பணி நியமன ஆணை வழங்கியிருக்கிறார்.
பின்னர், சிறிது நாள்களிலேயே அது போலி ஆணை என்று தெரியவந்திருக்கிறது. அதையடுத்து, உடனே இந்த மோசடி குறித்து சந்தானகிருஷ்ணன் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்தார். அதனடிப்படையில், மாவட்டக் குற்றப்பிரிவில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, மூன்று தனிப்படைகள் அமைத்து மோசடி செய்த நபர்களை போலீஸார் தேடிவந்தனர்.

இந்த நிலையில், நேற்று சரவணக்குமார் உள்ளிட்ட ஆறு பேரையும் போலீஸார் கைதுசெய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்தக் கும்பல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஏராளமானோரை ஏமாற்றி, கோடிக்கணக்கில் வசூல் வேட்டை நடத்தியது தெரியவந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.