புதுடில்லி : அமெரிக்கா செல்வதற்காக, ‘விசா’ நேர்காணலுக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் இந்தியர்கள், இடைப்பட்ட காலத்தில் வேறு நாடுகளுக்கு சென்றால், அங்கேயே அமெரிக்க விசாவுக்கான நேர்காணலில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வர்த்தக ரீதியாக அமெரிக்கா செல்பவர்களுக்கு பி1 விசாவும், சுற்றுலா பயணியருக்கு பி2 விசாவையும் அமெரிக்கா அளிக்கிறது. கொரோனா கால சர்வதேச பயண கட்டுப்பாடுகள் விலக்கப்பட்ட பின், இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்ல பி1 மற்றும் பி2 விசா கேட்டு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
முதல் முறையாக இந்த இரு விசா கேட்டு விண்ணப்பிப்போர், மூன்று ஆண்டுகள் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. அந்த அளவுக்கு விண்ணப்பங்கள் குவிய துவங்கின. இவை படிப்படியாக குறைந்து தற்போது 500 நாட்கள் வரை காத்திருக்கும் நிலை உள்ளது.
இதை சரி செய்ய இந்தியாவுக்கான அமெரிக்க துாதரகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தன. ஆனாலும், பிரச்னை முற்றிலுமாக தீரவில்லை. இதையடுத்து, புதிய மாற்று ஏற்பாடுகளை இந்தியாவுக்கான அமெரிக்க துாதரகம் செய்துள்ளது.
அதன்படி, பி1, பி2 விசாவுக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்கள், இடைப்பட்ட காலத்தில் வேறு நாடுகளுக்கு பயணம் செய்தால், அங்குள்ள அமெரிக்க துாதரகங்களில் விசா நேர்காணலில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement