டாஸ்மாக் பணியாளர்களை “கரூர் குரூப்” என்ற பெயரில் ஒரு கும்பல் மிரட்டுவதாகவும் பணம் படிப்பதாகவும் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாக சங்க சிறப்பு தலைவர் பாலகணேசன் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் “தமிழக முழுவதும் கரூர் குரூப் என்ற பெயரில் டாஸ்மார்க் பணியாளர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்.
டாஸ்மாக் பணியாளர்கள் இடமிருந்து பணம் பறிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து எந்த நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை. தமிழகத்தில் எத்தனை பார்கள் அனுமதி இல்லாமல் நடத்தப்படுகிறது.
இந்த மாறுபாட்டான நடவடிக்கையால் எத்தனை கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பதை தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டுமென வலியுறுத்துகிறோம்” என செய்தியாளர்கள் சந்திப்பில் வேதனையுடன் பேசியுள்ளார்.