கசியான்டெப்: துருக்கியில் இன்று 3-வது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானது.
துருக்கியின் தென் மத்திய பகுதியில் உள்ள கசியான்டெப் நகருக்கு அருகே உள்ள பகுதியை மையமாகக் கொண்டு இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆக பதிவாகியது. இதில், இதுவரை 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. பலர் இன்னமும் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நில அதிர்வுகள் தொடர்ந்து ஏற்பட்டு வந்த நிலையில் இன்று மதியம் மற்றுமொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகியது. இதைத் தொடர்ந்தும் நில அதிர்வுகள் ஏற்பட்ட வண்ணம் இருந்தன. 50-க்கும் மேற்பட்ட முறை நில அதிர்வுகள் ஏற்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
துருக்கியில் மட்டுமல்லாது அண்டை நாடான சிரியாவிலும் இந்த நிலநடுக்கங்கள் உயிர் சேதத்தையும் பொருட்சேதத்தையும் ஏற்படுத்தி உள்ளன. அதோடு, லெபனான், சைப்ரஸ், கிரீஸ், ஜோர்டான், இராக், ரொமானியா, ஜார்ஜியா, எகிப்து ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தில் இருந்து 5 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிரீன்லாந்திலும் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
முதல் நிலநடுக்கம் உள்நாட்டு நேரப்படி அதிகாலை 4.17-க்கு நேரிட்டுள்ளது. இது பூமிக்கு 17.9 கிலோ மீட்டர் அடி ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இதனை தெரிவித்துள்ளது.
துருக்கியில் இதற்கு முன் 1999-ம் ஆண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகி இருந்தது. அந்த நிலநடுக்கம் காரணமாக 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.