நீக்கத்தை எதிர்த்து முன்னாள் எம்.பி வழக்கு: அதிமுக பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்கும்படி, அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி, கடந்த 2018-ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தனது நீக்கத்தை எதிர்த்து 2021-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு காலத்துக்குள் தாக்கல் செய்யாமல், மூன்று ஆண்டுகளுக்கு பின் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி, கே.சி.பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து கே.சி.பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், “கரோனா தொற்று காலத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான கால வரம்பை தளர்த்தி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த 2020 மார்ச் முதல் 2021 அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியாததால், 2021 அக்டோபருக்கு பின் 90 நாட்கள் அவகாசம் வழங்கவும் உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்திருந்தது.

அதனால் குறித்த காலத்தில் வழக்கு தொடரவில்லை எனக் கூறி எனது மனுவை தள்ளுபடி செய்தது தவறு. அடிப்படை தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு தன்னை கட்சியில் இருந்து நீக்க அதிகாரமில்லை. தன்னை நீக்கியது கட்சியின் ஆரம்பகால விதிகளுக்கு முரணானது. எனவே தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆஷா அமர்வு, அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் இரு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.