நீட் ரத்து வருமா வராதா? அந்த ரகசியத்தை சொல்லுங்க உதயநிதி – ஆர்.பி.உதயகுமார் கேள்வி

உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பதற்காக மக்கள் முகம் சுளிக்கும் அளவில், மதுரையில் விழா ஏற்பாடு நடக்கிறதே, நீட் தேர்வு ரகசியத்தை மதுரையில் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுவாரா, அல்லது கல்வி கடன் ரத்து என கூறினார்களே அதைபற்றி மகிழ்ச்சியான தகவலை வெளியிடுவாரா என அடுக்கடுக்காக பல கேள்விகளை எழுப்பியுள்ளார், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், மாண்புமிகு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிற விழாவில் பங்கேற்பதாக, கடந்த இரண்டு நாட்களாக மதுரையிலே பிரமாண்ட விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஆனால் உண்மை நிலையிலே தடை செய்யப்பட்டு இருக்கின்ற, ரத்து செய்யப்பட்டு இருக்கின்ற முதியோர் ஓய்வு ஊதியங்களை அந்த பயனளிகளுக்கு வழங்குவதற்கு விளையாட்டு துறை அமைச்சர் முன் வருவாரா?. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் வழங்கிய திட்டங்கள் எல்லாம் நிறுத்தப்பட்டு இன்றைக்கு அந்த திட்டங்கள் செயல்படுமா, வருமா, வராதா என்று மக்கள் காத்திருக்கின்றார்களே, குறிப்பாக மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குகிற திட்டத்திற்குரிய உண்மை நிலையை உதயநிதி ஸ்டாலின் விளக்கம் கொடுப்பதற்கு முன் வருவாரா?.
image
கல்விக்கடனை ரத்து செய்வோம் என்று கடந்த சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியிலே அறிவித்திருப்பது குறித்து, உதயநிதி ஸ்டாலின் ஏதேனும் மகிழ்ச்சிகரமான அறிவிப்பு வெளியிடுவதற்கு எதுவும் வாய்ப்பு இருக்கிறதா?. ஒரு செங்கலை காட்டி எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பிரச்சாரம் செய்தாரே, அதை நினைவுகூர்ந்து இந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான நடவடிக்கைகளில் அவருடைய பங்களிப்பை பொதுமக்களிடத்திலே விளக்கி சொல்வதற்கு முன் வருவாரா?.
image
இல்லை தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தப்பட்டு இருக்கிறதே, அதற்கு அவர் என்ன விளக்கம் சொல்ல போகிறார். இன்றைக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், உழவர் பாதுகாப்பு திட்டம் இது போன்ற திட்டங்கள் எல்லாம் முழுமையாக செயல்படாமல் முடங்கி கிடக்கிறதே, இதற்கெல்லாம் விளக்கம் அளிப்பாரா?
மதுரையில் நலத்திட்ட நிகழ்ச்சிக்காக மிகப் பிரம்மாண்ட அளவிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது, மக்களை முகம் சுளிக்க வைக்கும் அளவிலே தான் நடைபெற்று வருகிறது. முக்கியமாக நீட் தேர்வை பற்றி அவர் சொல்ல வேண்டிய ரகசியத்தை மதுரையிலே வெளியிடுவாரா? என்பதெல்லாம் மக்கள், இளைஞர்கள் ஆவலோடு எதிர்பார்த்து இருக்கிறார்கள்.
image
ஏற்கனவே விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்குவதற்காக மதுரையில் பங்கேற்ற போது, அதெல்லாம் எத்தனை இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் கிடைத்தது என்பதை இளைஞர்கள் இன்றைக்கு கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதை வெளியிடுவாரா?
ஒன்றே ஒன்றை மட்டும் தான் அவர்கள் செய்துள்ளார்கள், மதுரையில் அம்மா திடல் என்று இருந்ததை கலைஞர் திடல் என்று மாற்றி இருக்கிறார்கள். கடந்த பத்தாண்டு காலமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் புரட்சித்தலைவரின் நூற்றாண்டு விழா, 60 திருமண விழா, 120 திருமண விழா, முல்லைப் பெரியாறுக்காக அம்மாவிற்கு அனைத்து விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கிற மாநாடு, எடப்பாடியார் பங்கேற்ற இளைஞர் பெருவிழா என்று அம்மா திடலாக அங்கே தொடர்ந்து நாங்கள் பத்தாண்டு காலம் நடத்தி வந்த, அந்த திடலின் பெயரை கலைஞர் திடலாக மாற்றியது மட்டும் தான் திமுகவின் சாதனையாக தெரிகிறது.
image
இது எல்லாம் உதயநிதி ஸ்டாலின் கவனத்திற்கு தெரியுமா, தெரியாதா என்பதை எல்லாம் மதுரை மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று மட்டும் நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன் என வீடியோவில் கூறியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.