பர்வேஸ் முஷரஃப் காலத்தில் இந்தியா-பாகிஸ்தான்; உறவும், பிரச்னைகளும் எப்படி இருந்தன? – ஓர் அலசல்

பாகிஸ்தான் அதிபராக இருந்த பர்வேஸ் முஷரஃப் (Pervez Musharraf) உடல்நிலை மோசமான காரணத்தால் பிப்ரவரி 5-ம் தேதி மரணமடைந்தார். இவர், இந்தியா-பாகிஸ்தான் இடையே ‘கார்கில் போர்’ நடக்க முக்கிய காரணமாக இருந்தவர். பிரதமர் நவாஸ் ஷெரீஃப் அரசுக்கு எதிராக அவசர நிலையை அறிவித்தார். அதைக் காரணம் காட்டி, உச்ச நீதிமன்ற நீதிபதியை சிறையில் அடைத்தார். இப்படியாக இவர் ஆட்சிக்காலத்தில் பல அடக்குமுறைக்களைக் கையாண்டார். இதையெல்லாம் எதிர்த்து 2013-ம் ஆண்டு இவர்மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டது. அதன் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, சிகிச்சைக்காக பாகிஸ்தானைவிட்டு வெளியேறி துபாய் சென்றார். இந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.

சிகிச்சையில் பர்வேஸ் முஷரஃப்

இவர், இந்தியா-பாகிஸ்தானை ஒன்றிணைக்கப் பல முயற்சிகளை மேற்கொண்டார் என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக, 1999-ம் ஆண்டு, ராணுவ அதிபராக இருந்த பர்வேஸ் முஷரஃப், இந்திய பிரதமருக்கு வணக்கம் சொல்ல வேண்டும் என்னும் காரணத்துக்காக நிகழ்ச்சியில் பங்கேற்பதைத் தவிர்த்தார். மேலும் 2002-ம் ஆண்டு நேபாளத்தில் நடந்த பிராந்திய உச்சி மாநாட்டில் பங்கேற்று பேசி முடித்துவிட்டு, தாமாக வந்து இந்திய பிரதமர் வாஜ்பாய் கையைக் குலுக்கியது உலகளவில் ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்டது. இப்படி மூன்று ஆண்டுகளில் இந்த மாற்றம் நிகழ்ந்தது ஏன்… என்னும் கேள்வி முன்வைக்கப்பட்டது. ஆனால், “அதைத் தவிர்த்து வேறு வழியில்லை” எனத் தெரிவித்தார் முஷரஃப்.

வாஜ்பாய்

கார்கில் மூளை பர்வேஸ் முஷரஃப்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த முக்கிய போராக கருதப்படுவது கார்கில். இந்திய எல்லைப் பகுதிகளுக்குள் நுழைய முனைந்த பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்த்து போர் நடந்தது. இதில் 4,000-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதே வேளையில, இந்திய வீரர்கள் 500-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்து இந்தப் போரின் வெற்றியை உறுதி செய்தனர். குறிப்பாக, லாகூர் ஒப்பந்தத்துக்குப் பிறகு நடந்த இந்தப் போர், `பாகிஸ்தான், இந்தியாவை முதுகில் குத்தும் செயல்’ என ஆட்சியாளர்கள் விமர்சித்தனர். ஆனால், இதற்கு முழு முதற்காரணமாக கருதப்படுபவர் அப்போதைய ராணுவ அதிபர் பர்வேஸ் முஷரஃப். அவரின் பயங்கரவாத முன்னெடுப்புதான், இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் நாட்டினர் உள்ளே புக காரணமாக இருந்தது.

இதை உறுதி செய்யும் வகையில், இந்தப் போரின்போது அந்த நாட்டின் அதிபராக இருந்த நவாஸ் ஷெரீஃப், கார்கில் போர் நடந்ததற்கு முக்கிய காரணம் ராணுவ அதிபர் முஷரஃப் என்னும் குற்றச்சாட்டை முன்வத்ததார். இது முஷரஃப் மீதான இந்தியாவின் பார்வையை முற்றிலுமாக மாற்றியது. மேலும், அதே ஆண்டு நவாஸ் ஷெரீஃப்பை பதவியில் இறக்கிவிட்டு, ராணுவத்தின் உதவியுடன் பர்வேஸ் முஷரஃப் அதிபராகப் பதவியேற்றது இந்தியாவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியது.

கார்கில் நினைவிடம்

இந்தியாவுக்கு உதவிய பாகிஸ்தான்!

ஆனால், இந்தியாவின் டெல்லியில் பிறந்த பர்வேஸ் முஷரஃப், 2001-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த நிலநடுக்கம் தொடர்பாக, இந்திய பிரதமர் வாஜ்பாயிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார். மேலும், பாகிஸ்தானிலிருந்து இந்திய மக்களுக்கு மருந்து பொருள்களும் அனுப்பப்பட்டன. இது இரு நாட்டுக்குமிடையே இருந்த சிக்கலான சூழலை சற்றுத் தணித்தது. அது எந்த அளவுக்கு என்றால், வணக்கம் சொல்ல தயங்கியவரை தாமாக முன்வந்து கை குலுக்கச் செய்தது. இதன் தொடர்ச்சியாக, இரு நாட்டுக்குமிடையே டெல்லியின் ஆக்ராவில் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்பது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. இதை தன் சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கும் பர்வேஸ் முஷரஃப், “வாஜ்பாய் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை தவறவிட்டார்” என எழுதியிருந்தார்.

முஷரஃப் – வாஜ்பாய்

ஆனாலும் பர்வேஸ் முஷரஃப் எடுத்த முயற்சிகள் கைவிடவில்லை. 2004-ம் ஆண்டு நடந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க வாஜ்பாய் பாகிஸ்தான் சென்றார். அடுத்த சமாதானப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அந்த ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தோல்வியைச் சந்தித்தது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மன்மோகன் சிங் இந்திய பிரதமராகப் பொறுப்பேற்றார். ஆனால், தொடர்ந்து இந்தியாவுடன் தன் நட்பை பலப்படுத்த, 2006-ம் ஆண்டு நியூயார்க் உச்சி மாநாட்டில் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார் பர்வேஸ் முஷரஃப். அதன்பின் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைக் காண இந்தியாவுக்கு வருகை தந்தார். இப்படியாக தன் இந்திய வருகை மூலம் பிரச்னையைத் தீர்க்க முயன்றார்.

மன்மோகன் சிங்

அதைத் தவிர, பர்வேஸ் முஷரஃப் 2006-ம் ஆண்டு காஷ்மீரை முன்வைத்து 4 திட்டங்களை உருவாக்கினார். எல்லைப்பகுதியில் உள்ள இரு நாட்டு மக்களும் சுதந்திரமாக சென்றுவர அனுமதிக்கப்பட்டால், காஷ்மீருக்கு உரிமை கோருவதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்வதாக அந்தத் திட்டங்களில் கூறப்பட்டிருந்தது. இது சரியான தீர்வாக இருக்கும் என்பதே பல நிபுணர்களின் கணிப்பாக இருந்தது. ஆனால், கார்கில் போரின் மூளையாக இருந்த பர்வேஸ் முஷரஃபின் நிலைப்பாட்டில் இந்தியாவுக்கு பெரும் சந்தேகங்கள் இருந்தன. இதில் உள்நோக்கம் இருப்பதாகவே இந்தியாவைச் சேர்ந்தவர்கள் கருதினர். அதன்விளைவாக எந்த முடிவும் அந்தத் திட்டங்களில் எட்டப்படவில்லை.

ஜம்மு – காஷ்மீர்

இப்படி இந்தியாவுக்கு பர்வேஸ் முஷரஃப் மீது மாற்றுக் கருத்து இருந்தது. இதனால் எந்த நிலைப்பாடும் எட்டப்படவில்லை. ஆனால் பாகிஸ்தான்-இந்தியா இடையே அமைதிக்கான முயற்சியை முன்னெடுத்து வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பதிவுசெய்திருக்கிறார் அவர். இதனால்தான் அவர் மறைந்த பின்னர் அவரை கடுமையாக விமர்சித்த பா.ஜ.க தலைவரை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி சசி தரூர் பேசியிருக்கிறார். அதில் அவர், “என்னதான் அவர் கார்கில் போர் உருவாக காரணமாக இருந்தாலும், 2002-2007-ம் ஆண்டு வரை ‘இந்தியா- பாகிஸ்தான்’ அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகப் பாடுபட்டார்” எனக் கூறியிருந்தார். இதை எதிர்த்து பா.ஜ.க பேசி வருகின்றனர். அதைத் தவிர்த்துவிட்டு அவர் சொன்ன முக்கியச் செய்தி அவர் அமைதிக்காக சில வேலைகளில் ஈடுபட்டது என்பதே…

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரஃப்

வேறு எந்த அதிபரும் இந்தியாவை இவ்வளவு நெருங்கியதில்லை என்பதே உண்மை. 2007-ம் ஆண்டு, பர்வேஸ் முஷரஃப் பதவி கவிழாமல், ஜனநாயக ஆதரவு இயக்கம் ஆட்சியைக் கைப்பற்றாமல் இருந்திருந்தால், அமைதிக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கும் என்பதே பெரும்பாலானோர் முன்வைக்கும் வாதமாக இருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.