ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் 8-ம் நாள் வேலைநிறுத்தத்தின்போது இன்று செட்டியார்பட்டி கிராமநிர்வாக அலுவலகம் முன் கஞ்சித்தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் கூலி உயர்வு, போனஸ் உயர்வு உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 30-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊதிய உயர்வு குறித்து விருதுநகர் தொழிலாளர் நலத்துறை அலுவலகம் மற்றும் ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருந்த விசைத்தறி உரிமையாளர் சங்கம், தொழிலாளர் சங்கம், தொழிலாள் நலத்துறை அதிகாரிகள் இடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தை ரத்தானது.
இந்நிலையில், வேலைநிறுத்த போராட்டத்தின் 8-ம் நாளான இன்று செட்டியார்பட்டி கிராம நிர்வாக அலுவலகம் முன் ஏஜடியுசி, சிஜடியுசி விசைத்தறி தொழிலாளர் சங்கங்கள் சார்பில் கஞ்சிதொட்டி திறக்கும் போராட்டம் நடப்பட்டது.
இந்நிலையில், இன்று ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தலைமையில் விசைத்தறி உரிமையாளர் சங்கம் மற்றும் தொழிலாளர் சங்கம் இடையே புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துதல் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.