தஞ்சாவூர்: தஞ்சாவூரில் விசிக தலைவர் திருமாவளவன் நேற்று அளித்த பேட்டி: பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்க அரசு அறிவித்துள்ளது போதுமானதாக இருக்காது. இதை அரசு மறுபரிசீலனை செய்து ரூ.35 ஆயிரம் கொடுக்க வேண்டும். அதானி, நாட்டிற்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இது தேசத்திற்கு பெரும் இழப்பாக உள்ளது. இதற்கு பிரதமர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இந்த பிரச்னையை எதிர்க்கட்சிகள் பேசுவதால் அவையை ஒத்திவைக்கக்கூடிய முடிவை பாஜ அரசு எடுத்து வருகிறது. இது மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய செயலாகும். அதானி பிரச்னையை இரு அவைகளிலும் பேசுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் அதிமுகவை பிளவுபடுத்தி இரண்டாவது இடத்தை பிடிப்பதற்கு பாஜக காய்களை நகர்த்தி வருகிறது. அதிமுக உட்கட்சி விவகாரங்களில் தலையிட்டு சசிகலா, தினகரன் ஆகியோரை ஓரம் கட்டினார்கள். அதேபோல் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரையும் மோத விட்டு பாஜக வேடிக்கை பார்த்து வருகிறது. இதை தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதிமுகவை பலவீனப்படுத்தி பாஜக தமிழ்நாட்டில் கால் பதிக்க முயற்சிக்கிறது. அதிமுக குழப்பத்திற்கு உள்ளாவதற்கு காரணம் பாஜகவின் சதி திட்டம் தான். இவ்வாறு அவர் கூறினார்.