உதயநிதிக்கு முதல்வர் டிக் அடித்த துறை: உங்கள் வீட்டு பிள்ளை – ஒர்க் அவுட் ஆகுமா?

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றது முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலன், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஆகியவை எந்த காரணத்திற்காக அவருக்கு வழங்கப்பட்டதோ அதன் பலன்களை கண்கூட பார்க்க முடிகிறது என்று கூறுகிறார்கள் திமுக மேலிட வட்டாரத்தில்.

மதுரையில் பிரம்மாண்ட கூட்டம்!மதுரை மாவட்டம் முழுவதுமுள்ள 72 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு 180 கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவி வழங்கும் பணிகளை உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். கிட்டதட்ட பிரம்மாண்ட மாநாடு போல் இந்த நிகழ்வை நடத்திக் காட்டியுள்ளனர். அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எம்.பி. சு.வெங்கடேசன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் திவ்ய தர்ஷினி, ஆட்சியர் அனீஷ் சேகர், மேயர் இந்திராணி, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பெண்களுக்காக நலத் திட்டங்கள்!கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பெண்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பெண்களுக்கான நடமாடும் காய்கறி வாகனம், நடமாடும் உணவகம் உள்ளிட்ட பல திட்டங்களை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அத்துடன் தமிழ்நாடு அரசு பெண்கள் முன்னேற்றத்துக்கு கொண்டு வந்துள்ள திட்டங்களை உதயநிதி ஸ்டாலின் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி!“தமிழ்நாட்டில் இதுவரை 50 லட்சம் சுய உதவி குழுக்கள் பயன்பெற்று வருகின்றன. இன்று மதுரை மாவட்டத்தில் மட்டும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுய உதவி குழுக்கள் பயன்பெறுகின்றன. மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் எல்லோரும் எங்கள் ஹீரோக்கள். தமிழகத்தில் 517 மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் ஊரக உள்ளாட்சி உறுப்பினர்களாக உள்ளனர் என்பது எங்களுக்கு மிக பெருமையாக உள்ளது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அரசு அளிக்கும் பணம், வெறும் பணம் அல்ல. அது அரசின் அக்கறை, அன்பு” என்று பேசினார்.
பெண்கள் மனதில் இடம் பிடிக்கும் உதயநிதிபெண்களின் மனதில் இடம் பிடித்துவிட்டால் அவர்களது குடும்பத்தில் ஒருவராக மாறிவிடலாம் என்பது தான் அரசியலில் ஈடுபடுவோரின் நீண்ட நாள் கருத்து. எனவே முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் பெண்களுக்காக நலத் திட்டங்களை நிறைவேற்றும் துறை உதயநிதி ஸ்டாலினுக்கு சேர்த்து வழங்கப்பட்டது. அதை அவர் மிகச் சரியாக பயன்படுத்தி வருகிறார். பயனாளிகளின் இடத்திற்கே சென்று உதயநிதி கை குலுக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது போன்ற ஏற்பாடுகள் முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சிகளில் மட்டுமே செய்யப்படும். தற்போது அமைச்சர் உதயநிதிக்கும் இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உங்கள் வீட்டு பிள்ளை முழக்கம் ஒர்க் அவுட் ஆகுமா?​​இவ்வளவு பெரிய தாய்மார்கள் கூட்டத்தை இவ்வளவு எழுச்சியுடன் எங்குமே பார்த்து இல்லை என்று கூறிய உதயநிதி ஸ்டாலின் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் உதவிகளின் முக்கியத்துவத்தை தனது பேச்சில் குறிப்பிட்டார். தற்போது அவர் அடிக்கடி கூறிவரும் ‘உங்கள் வீட்டு பிள்ளையாக இருந்து உங்களுக்காக உழைப்பேன்’ என்பதையும் மறக்காமல் கூற கூட்டம் ஆர்ப்பரித்தது. பெண்கள் கூட்டம் உதயநிதியை தங்கள் வீட்டு பிள்ளையாக ஏற்றுக்கொண்டார்களா என்பதை தேர்தல் சமயத்தில் தான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.