புதுடில்லி : ரயில் பயணத்தின் போது, தங்களுக்கு தேவையான உணவுகளை, ‘வாட்ஸ் ஆப்’ வாயிலாக பயணியர், ‘ஆர்டர்’ செய்யும் வசதி விரைவில் அறிமுகமாகிறது.
ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் இணையதளம் மற்றும், ‘மொபைல் போன்’ செயலி வாயிலாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு, ‘ஆன்லைன்’ வாயிலாக உணவு வினியோகம் செய்யும் வசதியை, ஐ.ஆர்.சி.டி.சி., ஏற்கனவே அளித்து வருகிறது.
இதை, www.catering.irctc.co.in என்ற இணையதளம் மற்றும், ‘புட் ஆன் டிராக்’ என்ற, ‘மொபைல் போன்’ செயலி வாயிலாக அளித்து வருகிறது.
மேலும், ‘வாட்ஸ் ஆப்’ வாயிலாக உணவு வினியோகம் செய்யும் நடைமுறையும் சில ரயில்களில் தற்போது அமலில் உள்ளது.
அதன்படி, ‘ஆன்லைன்’ வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்பவர்களின் மெபைல் போனுக்கு ஒரு வாட்ஸ் ஆப் குறுந்தகவல் அனுப்பப்படுகின்றது.
அதில் உள்ள, ‘லிங்’கை, ‘கிளிக்’ செய்து நம் விருப்ப உணவகங்களில் இருந்து உணவு ஆர்டர் செய்து கொள்ளும் வசதி ஏற்கனவே உள்ளது.
இதில் அடுத்த கட்டமாக, வாட்ஸ் ஆப் செயலி வாயிலாக நேரடியாக உணவு ஆர்டர் செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
அதில், ‘ஏஐ’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக நம் கேள்விகளுக்கு பதில் அளித்து, நம் விருப்ப உணவை ரயில்களில் வினியோகம் செய்யும் நடைமுறை விரைவில் அறிமுகமாகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement