வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி காவல் நிலையத்தில் பணிபுரிந்த 12 போலீசார் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி 5ஆம் தேதி அதிமுக முன்னாள் பிரமுகர் பாபு என்பவருக்கு கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க லத்தேரி காவல் நிலைய காவலர்கள் தவறியதாக புகார் எழுந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் லத்தேரி காவல் நிலையத்தில் பணிபுரிந்த அனைத்து காவலர்களையும் கூண்டோடு இடமாற்றம் செய்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
கத்திக்குத்து சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேர் நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் செயல்பட்ட தனிப்படையினர் மீதம் இருந்த இரண்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.
மேலும் லத்தேரி பகுதியில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும், அதற்கு லத்தேரி காவல் நிலையத்தில் பணியாற்றும் 12 காவலர்களும் உடந்தையாக இருப்பதாகவும் வேலூர் மாவட்ட கண்காணிப்பாளருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் லத்தேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த 12 காவலர்களையும் கூண்டோடு இடமாற்றியதோடு வேலூர் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த காவலர்களை லத்தேரி காவல் நிலையத்தில் பணியாற்றி மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் உத்தரவிட்டுள்ளார். ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த அனைத்து காவலர்களையும் கூண்டோடு ஏமாற்றிய சம்பவம் தமிழக காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.