தர்மபுரி அருகே கிராமத்திற்குள் புகுந்த ஆண் யானை: மக்கள் பீதி; கும்கி கொண்டு பிடிக்க ஆலோசனை

தர்மபுரி: தர்மபுரி அருகே ஆண் யானை ஒன்று இன்று ஊருக்குள் புகுந்து தெருவில் ஹாயாக நடந்து சென்றது. யானையை பார்த்து மக்கள் பீதியில் ஓட்டம் பிடித்தனர். கும்கி கொண்டு யானையை பிடிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் பென்னாகரம், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் வனத்தையொட்டிய கிராமங்களுக்குள் மக்னா மற்றும் ஒரு ஆண் யானை புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தன. இந்நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன் மக்னா யானை விவசாயியை தாக்கியது. இதையடுத்து வனத்துறையினர் ஆனைமலையில் இருந்து சின்னதம்பி என்ற கும்கி யானையை வரவழைத்து மக்னா யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பாலக்கோடு அருகே ஈச்சம்பள்ளம் பகுதியில் சுற்றிய மக்னா யானை 9 மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பின்னர் அந்த யானையை லாரியில் ஏற்றி மேற்குதொடர்ச்சி மலையில் முதுமலை டாப் சிலிப்பில் கொண்டு விடுவிடுத்தனர். இந்நிலையில் மற்றொரு ஆண் யானை ஈச்சம்பள்ளம் வனப்பகுதியில் முகாமிட்டிருந்த நிலையில் இன்று அந்த யானை தர்மபுரி அருகே முத்துக்கவுண்டன்கொட்டாய்-சவுளூர் இடையே தனியார் பள்ளியின் பின்புறம் முகாமிட்டது. அங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்த கரும்பு பயிரை ருசிபார்த்தது. தொடர்ந்து கிராமத்திற்குள் புகுந்த யானை, சாலையில் ஹாயாக நடந்து சென்றது. யானையை பார்த்த மக்கள் பீதியில் ஓட்டம் பிடித்தனர்.

இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில்  தர்மபுரி மாவட்ட வன அலுவலர் அப்பளநாயுடு மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். யானையை பிடிக்க கொண்டு வரப்பட்ட சின்னதம்பி கும்கி யானை, பாலக்கோடு வனச்சரக அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த கும்கி யானையை கொண்டு இந்த ஆண் யானையை பிடிக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே பாலக்கோடு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2குட்டி யானைகள் உட்பட 5 யானைகள், மணியக்காரன் கோட்டை வழியாக, கவுண்டம்பட்டி அருகே செங்கோடப்பட்டியில் உள்ள ஏரியில் முகாமிட்டுள்ளன.

அவற்றை வனத்துறை மற்றும் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும், இரவில் விவசாய நிலங்கள், வீட்டின் வெளியே பொதுமக்கள் படுக்க வேண்டாம் என எச்சரித்துள்ளனர். 5 யானைகளும், ஓசூர் வனப்பகுதியில் இருந்து வந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். செங்கோடப்பட்டி ஏரி பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.