சென்னை: தமிழகத்தில் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட பகுதிகள் மற்றும் இதர பகுதிகளில் மத்திய குழுவினர் இன்று ஆய்வுகளை தொடங்குகின்றனர். தமிழகத்தில் பருவம் தவறி ஜனவரி இறுதி மற்றும் இம்மாத தொடக்கத்தில் பெய்த கனமழையால் காவிரி டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் சம்பாபயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வரை நிவாரணம் அறிவித்துள்ளார்.
நெல் கொள்முதல் தொடர்பான வழிகாட்டுதல்களில் கூடுதல் தளர்வு, அதாவது 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய அனுமதியை வழங்குமாறும் பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம் எழுதியிருந்தார். இதன் அடிப்படையில், மத்திய உணவுத் துறை செயலருக்கு தமிழக உணவுத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் கடிதம் எழுதியிருந்தார்.இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பயிர் பாதிப்பை ஆய்வு செய்ய ஒரு குழுவை மத்திய அரசு அமைத்து உத்தரவிட்டது.
சென்னையில் உள்ள தரக் கட்டுப்பாட்டு மையத்தின் தொழில் நுட்ப அதிகாரி சி.யூனுஸ், பெங்களூருவில் உள்ள தரக் கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுட்ப அதிகாரிகள் பிரபாகரன் மற்றும் ஒய்.போயா ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக பிரபாகரன் செயல்படுகிறார்.
இந்த குழுவினர் நெல் மற்றும் பயிர் தொடர்பான மாதிரிகளை சேகரித்து, தமிழகத்தில் உள்ள உணவுக் கழகத்தின் பரிசோதனைக் கூடத்தில் சோதனை மேற்கொண்டு, அறிக்கை அளிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த குழுவினர் இன்று முதல் டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் பயிர் பாதிப்புகளை பார்வையிட்டு, மாதிரிகளை சேகரிப்பதுடன், விவசாயிகளிடமும் தகவல்களை கேட்டறிய உள்ளனர்.