திருவனந்தபுரம்: கேரளா பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் மீது ரூ.2 வரி விதிக்கப்பட்டதை கண்டித்து கொச்சியில் காங்கிரஸ் கட்சியினர் 2-வது நாளாக நடத்திய போராட்டம் மோதலில் முடிவடைந்தது. ஆளும் மார்சிஸிட் கட்சியை எதிர்த்து நேற்று காங்கிரஸ் தொண்டர்கள் திருவனந்தபுரத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இன்று கொச்சியில் பல ஆயிரம் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு ஆளும் கட்சிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரியை உடனே திரும்ப பெற வேண்டும் என்று அவர்கள் முழக்கம் எழுப்பினர்.
அத்துடன் தடுப்புகளை தகர்த்து முன்னேறியதால் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். வஜ்ரா வாகனம் மூலம் போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீச்சடிக்கப்பட்டது. என்றாலும் போராட்டம் தொடர்ந்ததால் போலீசார் லேசான தடியடியிலும் ஈடுப்பட்டனர். போராட்டத்தின் போது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதால் அந்த இடமே சண்டை களம் போல் காட்சியளித்தது. இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏராளமான பெண்களும் பங்கேற்றனர். பெட்ரோல், டீசல் விலையில் ரூ.2 உயர்த்தி இருப்பதன் மூலம் இது மக்கள் விரோத அரசு என்பது நிரூபணமாகியுள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர். எரிபொருள் விலை ஏற்றத்தை கண்டித்து திருவனந்தபுரம், கொச்சி உள்ளிட்ட இடங்களில் பாரதிய ஜனதாவினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.