அதானியை மோடி அணைப்பார்; மக்கள் பசுவை அணைக்க வேண்டும் – சு.வெங்கடேசன் எம்.பி. கலாய்!

ஆண்டு முழுவதும் காதலை கொண்டாடலாம் என்றாலும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர்கள் தினம் என பிரத்யேகமாக குறித்துக்கொடுத்துள்ளதால், உலகம் முழுவதும் அன்றைய தினம் காதலர்கள் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். கடற்கரைகள், பூங்காக்கள், உணவு விடுதிகள் ஆகியவை இளசுகள் கூட்டத்தால் நிரம்பி வழியும்.

ஆனால், இந்தியாவில் சில இடங்களில் அடிப்படைவாதிகள், மதவாதிகள் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காதலர் தினத்தில் காதலர்களை பிடித்து வந்து கட்டாய திருமணம் செய்து வைப்பது, பொது இடங்களில் அவர்களை அவமதிப்பது, வன்முறையை ஏவிவிடுவது போன்ற செயல்களிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பிப்ரவரி 14ஆம் தேதியை ‘பசு அணைப்பு நாள்’ (cow hug day) ஆக பசு விரும்பிகள் கொண்டாடி வாழ்வில் மகிழ்ச்சி பெறுங்கள் என்று விலங்குகள் நல வாரியம் தெரிவித்துள்ளது. “பசுவை கட்டியணைத்தால் உணர்ச்சிப் பெருக்கு ஏற்படும். அதன் விளைவாக தனி நபராகவும், சமூகமாகவும் நமக்கு மகிழ்ச்சி பொங்கும். எனவே பிப்ரவரி 14ஆம் தேதியை ‘cow hug day’ ஆக பசு விரும்பிகள் கொண்டாடி வாழ்வில் மகிழ்ச்சி பெறுங்கள்.’ என்று ஒன்றிய கால்நடை மற்றும் மீன் வளத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் விலங்குகள் நல வாரியம் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேற்கத்திய கலாச்சாரங்களின் வளர்ச்சியால் நமது வேத கால பழக்கவழக்கங்கள் அழியும் நிலையில் இருக்கின்றன. நாம் பசுவை அரவணைப்பதன் மூலம் பேருவகை அடைய முடியும் என்றும் விலங்குகள் நல வாரியம் தனது சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விலங்குகள் நல வாரியத்தின் இந்த அறிவிப்புக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், பசு அணைப்பு நாள் தொடர்பான அறிவிப்பை சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவில் “மகிழ்ச்சி பொங்க” இரண்டு வழிமுறைகளை ஒன்றிய அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதானியை மோடி அணைப்பார். மக்கள் பசுவை அணைக்க வேண்டும். இதுவல்லவோ அரசு.” என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் சமீபத்தில் ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் பங்குச் சந்தையில் பல்வேறு முறைகேடுகளைச் செய்து, ரூ.17.80 லட்சம் கோடிக்கு மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், பங்குச்சந்தையில் மோசடி செய்து, போலி நிறுவனங்கள் மூலமாக அதானி நிறுவனம் பணத்தை முறைகேடாக ஈட்டியுள்ளது. மேலும், போலி நிறுவனங்களைத் தொடங்கிவரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளனர் என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையில் எழுப்பப்பட்டுள்ளன.

ஆனால், ஹிண்டன்பர்க் அறிக்கை இந்தியாவின் வளர்ச்சி மற்றும் எதிர்கால இலக்கு ஆகியவற்றுக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல் என அதானி குழுமம் விளக்கம் அளித்தது. இதற்கு பதிலடி கொடுத்த ஹிண்டன்பர்க் நிறுவனம், தேசியவாதம் என்ற போர்வை யில் அதானி குழுமம் தனது முறைகேடுகளை மூடி மறைக்க முயற்சி செய்வதாக பகிரங்கமாக சாடியது.

ஏற்கனவே அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு பல்வேறு சலுகைகளை அளிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலும் எதிரொலித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், விவாதிக்க அனுமதி மறுக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதனிடையே, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்த பிரதமர் மோடி, தனது அரசாங்கத்தின் மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் பொய்யானது எனவும், அவை தவறான குற்றச்சாட்டுகள் எனவும் தெரிவித்தார். தேசத்தின் பெருமையின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் எனவும் அவர் தெரிவித்தார். ஆனால், அதானியின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. மேலும், நாடாளுமன்ற கூட்டுக்குழு அல்லது உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் அதானி குழும மோசடி தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கும் அவர் பதிலளிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.